×

சூதாட்டத்தாலும், நுழைவுத்தேர்வாலும் உயிர்கள் பலியாவதை தடுக்க சட்டம் இயற்றினால் தடுக்கிறார்கள் 2024 நாடாளுமன்ற தேர்தல் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை:  இந்தியைத் திணிப்பார்கள். மாற்று மதத்தவர் மீது வெறுப்புப்  பிரச்சாரத்தை செய்வார்கள். ஆனால் சூதாட்டத்தாலும், நுழைவுத் தேர்வாலும்  உயிர்கள் பலியாவதைத் தடுக்க நாம் சட்டம் இயற்றினால் அதை நிறைவேற்றாமல்  தடுக்கிறார்கள். இவை அனைத்திற்கும்  முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தலாக 2024  நாடாளுமன்றத் தேர்தல் அமையப் போகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் பவள விழாவில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், மா.சுப்பிரமணியம், செஞ்சி மஸ்தான் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அமைப்பின் 75வது ஆண்டு பவளவிழாவை எழுச்சியோடு, ஏற்றத்தோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சிறுபான்மையாக இருக்கக்கூடிய இசுலாமியர்களுக்கான அமைப்பாக மட்டுமில்லாமல் பிற்படுத்தப்பட்டோர், விளிம்பு நிலை மக்களுக்கான அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது என்பது  பாராட்டுக்குரியது. திமுகவுக்கும், இசுலாமிய சமூகத்திற்குமான தொடர்பு என்பது இன்று - நேற்று ஏற்பட்டதல்ல. தலைவர் கலைஞரை உருவாக்கியதில், பெரியார் நடத்திய குடிஅரசு இதழைப் போலவே, ‘தாருல் இஸ்லாம்’ என்ற இதழுக்கும் பங்குண்டு. மிகச் சிறுவயதிலேயே ‘தாருல் இஸ்லாம்’ இதழைப் படித்து, தான் விழிப்புணர்வு பெற்றதாக தலைவர் கலைஞர் நெஞ்சுக்கு நீதியில் எழுதி இருக்கிறார்.

‘என்னுள் சிந்தனை மாற்றம் ஏற்படுத்தியவர்களில் தாவூத் ஷாவுக்கும் பங்குண்டு’ என்று தலைவர் கலைஞர் சொல்லி இருக்கிறார். இன்னும் சொல்லப்போனால்  அண்ணா, தலைவர் கலைஞரை இணைக்கப் பாலமாக இருந்ததே இஸ்லாமிய சமுதாயம்தான். இந்த மாநாட்டை ஒட்டி சில தீர்மானங்களை நீங்கள் நிறைவேற்றி எனக்கு வழங்கியிருக்கிறீர்கள்.பிறப்பு, இறப்பு, திருமணங்களை பதிவு செய்யும் அதிகாரத்தை கேரள மாநிலத்தில் உள்ளது போல உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்திருக்கிறீர்கள். உங்கள் கோரிக்கைகள் முறையாக பரிசீலிக்கப்படும்.

உங்களது மிக முக்கியமான ஒரு கோரிக்கை என்பது நீண்டகாலமாக சிறையில் இருக்கும் முஸ்லீம் சிறைவாசிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பது தான். அதாவது, 14 ஆண்டு முதல் 28 ஆண்டுகள் வரை சிறைவாசத்தை முழு தண்டனை காலமாகக் கருதி கருணை  அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் அல்லது பரோல் விடுப்பு வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்கள். திமுக ஆட்சி அமைந்ததும் சென்னை உயர்நீதிமன்றத்தினுடைய ஓய்வு பெற்ற நீதிபதி என்.ஆதிநாதன் தலைமையில் ஆறுபேர் கொண்ட குழுவை அமைத்தோம்.

மிக அதிக ஆண்டுகள் சிறையில் விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களை  மனிதநேய அடிப்படையில் விடுதலை செய்வது குறித்து ஆராய்வதற்காக இந்தக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினுடைய பரிந்துரைகள் அரசிடம் வழங்கப்பட்டிருக்கிறது. இன்றைக்குக் கூட இது குறித்து கோப்புக்களை பார்த்து விட்டுத் தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். விரைவில் அவை ஆளுநருடைய ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்படும். சூதாட்டத்துக்கு எதிரான சட்டத்துக்குக் கூட ஒப்புதல் தர மறுக்கிறார். நான்கு மாதங்கள் கழித்து, மாநில அரசுக்கு இது போன்ற சட்டத்தை நிறைவேற்ற உரிமை இல்லை என்று சொல்கிறார்.

இந்த ஒரு சாதாரண சட்டத்தைக் கூட நிறைவேற்றுவதற்கு உரிமை இல்லாத மாநிலத்துக்குத் தான் அவர் ஆளுநராக இருக்கிறாரா? நீட் விலக்கு் கேட்டு அவசர சட்டம் போட்டு அனுப்பினால் அதை நீண்டநாள் கிடப்பில் போட்டுத்தான் குடியரசுத் தலைவருக்கு அனுப்புகிறார். பல்கலைக்கழகங்களின் வேந்தர் சட்டம் முடக்கப்பட்டு கிடக்கிறது. இது தான் ஆளுநர்கள் செயல்படக் கூடிய லட்சணமா? சூதாட்டத்தாலும், நுழைவுத்தேர்வாலும் உயிர்கள் பலியாவதைத் தடுக்க நாம் சட்டம் இயற்றினால் அதை நிறைவேற்றாமல் தடுக்கிறார்கள். இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய தேர்தலாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் அமையப் போகிறது. அந்த வெற்றிக்கு அடிப்படை ஒற்றுமை. அதைத் தான் தொடர்ந்து நான் மட்டுமல்ல, எல்லோரும் வலியுறுத்துகிறோம்.  திராவிட மாடல் ஆட்சியின் தத்துவங்களை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்வோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Tags : Chief Minister ,MK Stalin , Legislation to prevent loss of lives due to gambling and entrance exams will stop 2024 parliamentary elections will put an end to it: Chief Minister MK Stalin's speech
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...