×

சீன வரலாற்றில் அரிய நிகழ்வு 3வது முறையாக அதிபராக ஜின்பிங் தேர்வு: நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது

பீஜிங்: சீனா அதிபராக தொடர்ந்து 3வது முறையாக ஜி ஜின்பிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். உலகின் 2வது பெரிய பொருளாதாரத்தையும், வலிமையான ராணுவத்தையும் கொண்ட சீனாவின் அதிபராக ஜி ஜின்பிங் கடந்த 2012ம் ஆண்டு முதல் முறையாக பொறுப்பேற்றார். சீன கட்சியின் நிறுவனர் மா சேதுங்கால் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அதிபர் ஜி சோங்ஷூனின் மகனான ஜின்பிங் ஆரம்பத்தில் பெரிய அளவில் அறியப்படாத தலைவராக இருந்தாலும், 2012ல் சீன கம்யூனிஸ்ட் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பிறகு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கினார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைவரே அதிபராக இருப்பார்.

கட்சியிலும், ராணுவத்திலும் ‘ஊழலுக்கு எதிரான நடவடிக்கை’ என தனது எதிராளிகளை ஒட்டுமொத்தமாக சிறைக்கு தள்ளினார். இதனால் மா சேதுங்குக்குப் பிறகு சீனாவின் சக்திவாய்ந்த தலைவராக ஜின்பிங் உருவெடுத்தார். சீன அரசியலமைப்பு சட்டப்படி 2 முறைக்கு மேல் எந்த தலைவரும் அதிபராக பதவி வகிக்க முடியாது. இந்த அரசியலமைப்பை கடந்த 2018ல் திருத்தினார் ஜின்பிங். இதன் மூலம் 3வது முறையாக கட்சியின் தலைவராக கடந்த ஆண்டு அக்டோரில் தேர்வு செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, சீன நாடாளுமன்றத்தில் தேசிய மக்கள் மாநாடு நேற்று நடந்தது.

இதில் நாடாளுமன்றத்தின் 2,952 உறுப்பினர்களும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவராகவும், ராணுவத்தின் தலைவராகவும் ஜின்பிங்கை நியமிக்க ஒப்புதல் அளித்தனர். இதன் மூலம் சீன வரலாற்றில் மா சே துங்குக்குப் பிறகு முதல் முறையாக 3வது முறையாக ஜின்பிங் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.  ஜின்பிங் 3வது முறையாக அதிபராகி இருப்பது,   இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறி உள்ளனர்.

* பதவிக்காக சட்டத்தை மாற்றிய உலக தலைவர்கள்
உலகின் பல நாடுகளிலும் 2 முறைக்கு மேல் ஒரே நபர் அதிபர் பதவி வகிக்கக் கூடாது என சட்டங்கள் அமலில் இருந்தது. அந்த சட்டத்தை ரஷ்யாவின் விளாடிமிர் புடின், கஜகஸ்தானின் நர்சுல்தான் நசர்பயேவ், உகாண்டாவின் யோவேரி முசேவெனி, காங்கோவின் ஜோசப் கபிலா உள்ளிட்ட பல தலைவர்கள் மாற்றி பதவியை தக்க வைத்துள்ளனர். அந்த வரிசையில் ஜின்பிங் இணைந்துள்ளார். அமெரிக்காவில் 32வது அதிபராக இருந்த பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், 1933 முதல் 1945ல் அவர் சாகும் வரை 4 முறை அதிபர் பதவி வகித்தார். அதன் பிறகு 2 முறைக்கு மேல் பதவி வகிக்க கூடாது என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.


Tags : Xi Jinping ,president ,Parliament , A rare event in Chinese history: Xi Jinping elected president for 3rd term: Parliament approves
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...