திருவள்ளூர்: திருவள்ளுர் ஊராட்சி ஒன்றியம், ஈக்காடு கிராமத்தில் தொட்டிக்கலை வட்டார பெண்கள் இணைப்பு குழு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழா கருத்தரங்கு நடைபெற்றது. இந்த விழுவிற்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசும்போது, திருவள்ளுர் மாவட்டத்தில் ஈக்காடு கிராமத்தில் தொட்டிக்கலை வட்டார பெண்கள் இணைப்பு குழு மூலம் நடத்தப்பட்ட அகில உலக பெண்கள் தினம் கருத்தரங்கில் சர்வதேச மகளிர் தினத்தை உற்சாகமாக கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் சிறப்பான கருத்தரங்கினை ஏற்பாடு செய்தமைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இந்த மகளிர் தின நன்னாளில் பெண்ணின் பெருமையைப் பற்றி இன்றைய இளைஞர் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பெண் குழந்தைகளைக் கற்பித்து ஊக்குவித்து சமூக வளர்ச்சிக்கு ஒரு நல்ல அடித்தளத்தை உருவாக்க அனைவரும் முன்வர வேண்டும். விளிம்பு நிலையிலிருக்கும் பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்கி ஊக்குவித்து வருகிறது. எனவே, இந்த வாய்ப்புக்களை பயன்படுத்தி சமுதாயத்தில் பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் மன உறுதி பெற்று வாழ்வில் உயர வேண்டும். தன்னையும் காத்து தன்னைச் சார்ந்தோரையும் காத்து உறுதி தளராமல் வாழ வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் சிறுதானியப்பயிர்கள் சாகுபடியை ஊக்குவிப்பதற்கு உத்தரவிட்டதனைத் தொடர்ந்து கூட்டுப்பண்ணையத் திட்டம், தமிழக முதல்வரின் மானாவாரி மேம்பாட்டு இயக்க திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம், நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு இயக்கம் ஆகிய திட்டங்களின் மூலம் சிறுதானியப்பயிர் விதைகள் மற்றும் இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது. மேலும், சிறுதானிய விளைபொருட்களை மதிப்புகூட்டி விற்பனை செய்வதற்கும், வங்கிக்கடன் பெறுவதற்கும் வேளாண்மைத்துறை மூலம் வழிவகை செய்து தரப்படும். தற்போது சிறுதானிய உணவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்து வருவதாலும், சென்னைக்கு மிகவும் அருகாமையில் இருப்பதாலும் சிறுதானிய விளைபொருட்களை எளிதில் விற்பனை செய்து இரட்டிப்பு வருமானம் பெறலாம்.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டை முன்னிட்டு, சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில், தொட்டிக்கலை வட்டார பெண்கள் இணைப்பு குழு சார்பாக அமைக்கப்பட்ட சிறுதானிய உணவு கண்காட்சியை, மாவட்ட கலெக்டர் திறந்து வைத்து பார்வையிட்டார். பிறகு தொட்டிக்கலை வட்டார பெண்கள் இணைப்பு குழுவைச் சேர்ந்த 150 உறுப்பினர்களுக்கு சிறுதானிய விதைகள் மற்றும் பல்வேறு பழ மரக்கன்றுகளையும் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் இலவசமாக வழங்கினார். இதில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசனர், வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் பெ.சாந்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
