×

கவாஜா 180, கிரீன் 114 ரன் விளாசல் ஆஸ்திரேலியா 480 ரன் குவிப்பு: 6 விக்கெட் வீழ்த்தி அஷ்வின் அசத்தல்

அகமதாபாத்: இந்திய அணியுடனான 4வது மற்றும் கடைசி டெஸ்டில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இந்திய பந்துவீச்சில் அஷ்வின் 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்திருந்தது. உஸ்மான் கவாஜா 104 ரன், கேமரூன் கிரீன் 49 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணற, கவாஜா 150 ரன் கடந்தார். மறு முனையில் கிரீன் தனது முதல் டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.

இருவரும் 5வது விக்கெட்டுக்கு 208 ரன் சேர்த்து சாதனை படைத்தனர். கிரீன் 114 ரன் (170 பந்து, 18 பவுண்டரி) விளாசி அஷ்வின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பரத் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த அலெக்ஸ் கேரி அதே ஓவரில் டக் அவுட்டாகி வெளியேற, இந்திய வீரர்கள் உற்சாகம் அடைந்தனர். மிட்செல் ஸ்டார்க் 6 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் ஷ்ரேயாஸ் வசம் பிடிபட்டார். இரட்டை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கவாஜா 180 ரன் எடுத்து (422 பந்து, 21 பவுண்டரி) அக்சர் பந்துவீச்சில் எல்பிடபுள்யு முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஆஸ்திரேலியா 409 ரன்னுக்கு 8வது விக்கெட்டை இழந்த நிலையில், லயன் - மர்பி ஜோடி 9வது விக்கெட்டுக்கு இந்திய வீரர்களின் பொறுமையை சோதித்தது.

மர்பி 41 ரன் (61 பந்து, 5 பவுண்டரி), லயன் 34 ரன் (96 பந்து, 6 பவுண்டரி) எடுத்து அஷ்வின் சுழலில் பலியாக, ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (167.2 ஓவர்). குனேமன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் அஷ்வின் 47.2 ஓவரில் 15 மெய்டன் உள்பட 91 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். ஷமி 2, ஜடேஜா, அக்சர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன் எடுத்துள்ளது (10 ஓவர்). ரோகித் 17 ரன், கில் 18 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 10 விக்கெட் முழுமையாக இருக்க, 444 ரன் பின்தங்கிய நிலையில் இந்தியா இன்று 3ம் நாள் சவாலை எதிர்கொள்கிறது.

Tags : Khawaja ,Vlasal Australia ,Ashwin , Khawaja 180, Green 114, Australia all out 480: Ashwin brilliant with 6 wickets
× RELATED தொடர் குற்றங்களில் ஈடுபட்ட 31 பேர் குண்டாசில் கைது: காவல்துறை நடவடிக்கை