முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க ரூ.58 கோடி ஒதுக்கியது ஒன்றிய அரசு

திருத்தணி: முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை சீரமைக்க ரூ.58 கோடி நிதி ஒதுக்கிடு செய்துள்ளது. சென்னையில் இருந்து தினமும் பேருந்துகள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் நாள்தோறும் திருமலை திருப்பதிக்கு பக்தர்கள் சென்று வருகின்றனர். அதேபோல், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் வெளிநாடுகள் செல்லவும், வெளி மாநிலங்கள் செல்லவும், சென்னை ஏர்போர்ட்டுக்கு ஏராளமானர் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக மாநில நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இது குறித்து அப்போதைய நாடாளுமன்ற திமுக உறுப்பினர் ஆ. கிருஷ்ணசுவாமி பாராளுமன்றத்தில் சிறப்பு கவனத்தை கொண்டு வந்தார். இதில், மாநில நெடுஞ்சாலையாக இருந்ததை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாகவும், திமுக கட்சி சார்பாகவும் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று அப்போதைய காங்கிரஸ் அரசு அதற்காக நிதி ஒதுக்கீடு செய்து, சென்னை வேப்பம்பட்டு பகுதியில் இருந்து, திருவள்ளூர் திருத்தணி நகரி புத்தூர் வரை இரண்டு வழி சாலையாகவும், புத்தூர் முதல் ஆந்திர மாநிலம் சந்திரகிரி அருகே உள்ள மல்லாபுரம் ஜங்ஷன் வரை நான்கு வழி சாலையாகவும் அமைக்கப்பட்டது. இதில், தமிழ்நாடு வரை 44 கிலோ மீட்டர், ஆந்திர மாநிலம் 63 கிலோ மீட்டர் என மொத்தம் 107.14 கிலோ மீட்டருக்கு தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.

இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. இதனால் சாலையில் பல இடங்களில குண்டும் குழியுமாகவும் மேடு பள்ளங்களாகவும் இருந்தது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த நெடுஞ்சாலையை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒன்றிய அரசிடம் முன்வைத்தார். தற்போது அந்த கோரிக்கையை ஏற்று இச்சாலையை சீரமைக்க ஒன்றிய அரசு ரூ.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது இச்சாலையை, நவீன இயந்திரம் மூலம் சாலையின் மேற்பரப்பில் உள்ள தார் கலவையை அகற்றி இதன் பின்னர் சாலையை சுத்தம் செய்து நவீன இயந்திரங்கள் மூலம் புதியதாக தார், சிறு ஜல்லி கலவை கொண்டு சாலை அமைக்க பணி நடந்து வருகிறது.

இது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை சேர்ந்த ப்ராஜெக்ட் ஆபிஸர் தியாகராஜன் கூறுகையில், தற்போது இச்சாலையானது இரண்டு வழி பாதை 10 மீட்டர் அகலமும், நான்கு வழி பாதைக்கு இரண்டு பக்கமும் எட்டே முக்கால் மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. நடுவில் நான்கு மீட்டர் சென்டர் மீடியம் அமைக்கப்படுகிறது. அதேபோன்று அதிகமாக விபத்து ஏற்படுகின்ற பகுதிகளில் தற்போது சாலையை அமைக்காமல், அந்தப் பகுதியில் மாற்று ஏற்பாடாக சாலையை விரிவு படுத்துவது என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.

* மின் விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும் பொதுமக்கள் லீலா பிரகாஷ் கூறும்போது, தற்போதைய சாலை அமைக்கப்படுவதால், அதிர்வின்றி வாகனங்கள் செல்லும்போது பயணிகளுக்கும், நோயாளிகளுக்கும், உடலில் முதுகு வலி ஏற்படாமல் பயணிக்க முடியும். மேலும், இந்த சாலை தரமாக போடப்பட்டு வருவதால் வாகனம் வேகம் அதிகரிக்கும். இந்த வாகனங்கள் இரவு நேரத்தில் அதிக வேகத்தில் செல்லும்போது கிராம பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிளோ அல்லது சாலை கடந்து செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, ஒன்றிய அரசு தேசிய நெடுஞ்சாலை முழுவதும் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் கிராமபுற இணைப்பு சாலை பகுதிகளில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்றார்.

* எரிபொருள் சிக்கனம் கால் டாக்ஸி ஓட்டுனர் வீரையன் கூறும்போது, தற்போது இச்சாலை அமைத்து வருவதன் காரணமாக திருத்தணியில் இருந்து சென்னைக்கு நாங்கள் விரைந்து செல்ல முடியும். உரிய நேரத்தில் பயணிகளைக் கொண்டு சேர்க்க முடியும். மேலும், எங்களுக்கு எரிபொருள் சிக்கனமும் ஏற்படும் என கூறினார்.

Related Stories: