×

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக ரூ.10 கோடியில் திட்ட பணிகள்

தாம்பரம்: தாம்பரம் மேம்பாலம் அருகில் உள்ள சண்முகம் சாலையானது மிகவும் முக்கிய சாலையாக அமைந்துள்ளது. இந்த சாலையின் அருகில் பேருந்து நிலையம், மார்க்கெட், சுரங்கப்பாதை மற்றும் தாம்பரம் மேம்பாலத்தின் இறங்கும் பகுதி அமைந்துள்ளது. இந்த சண்முகம் சாலையை தாம்பரம் மாநகராட்சி பராமரித்து வருகிறது.  இந்த சாலை கக்கன் சாலையில் பிரிந்து ஜிஎஸ்டி சாலையில் இணைகிறது. சண்முகம் சாலை சந்திப்பு ஜிஎஸ்டி சாலையை இணைக்கும் மிக முக்கியமான சந்திப்பாகும். மேலும் முக்கியமான வணிக சந்தையை இணைக்கும் சாலையாகவும் அமைந்துள்ளது. இந்த சந்திப்பு தாம்பரம் ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ளதால் எப்போதும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய பகுதியாக உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல்  காணப்படும்.  சில நாட்களாக, பயணிகள் மற்றும் சந்தைப் பயனர்கள் அதிகரித்துள்ளதால், பிரதான ஜிஎஸ்டி சாலைக்கும் சண்முகம் சாலைக்கும் இடையே சரியான இணைப்பு இல்லாமல் சந்திப்பு மிகவும் நெரிசலாக உள்ளது. தற்போது, சண்முகம் சாலை ஜிஎஸ்டி சாலையுடன் இணையும் பகுதியில், தாம்பரம் ரயில்வே  மேம்பாலத்தின் இறங்கும் பகுதி வலது பக்கம் 0.6 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இணைக்கும் பகுதியிலிருந்து 30 மீட்டர் தொலைவில் சர்வீஸ் சாலை (வளைவுப் பகுதி) முடிவடைகிறது.  இதனால், பாதசாரிகள் சுரங்கப்பாதை நுழைவு மற்றும் வெளியேற தடையாக உள்ளது. மேலும், ஜிஎஸ்டி சாலைக்கு நேரடி இணைப்பு இல்லாததால் பெரியார் சாலை வழியாக சுமார் 100 மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, ஜிஎஸ்டி சாலையையும், சண்முகம் சாலையையும் இணைக்கவும், பாதசாரிகள் மற்றும் சாலைப் பயனாளிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், பாதசாரி சுரங்கப்பாதையை விரிவுபடுத்தவும், சந்திப்பை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்பேரில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அரசாங்கத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2022-23ன் கீழ் சண்முகம் சாலையை ஜிஎஸ்டி சாலையுடன் இணைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ரூ.10 கோடி செலவில்  சுரங்கப்பாதை மற்றும் ஏற்கெவே உள்ள சுரங்கப்பாதையின் நுழைவாயிலை மாற்றி  அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் முடிவு செய்துள்ளனர். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை இந்த திட்டத்திற்கான மதிப்பீட்டை இறுதி செய்யும் பணி நடந்து வருகிறது.    ஒப்பந்தம் முடிந்த பிறகு கட்டுமானப் பணிகள் தொடங்கும் என நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து நெடுங்சாலைத்துறை அதிகாரி கூறுகையில், ‘‘சண்முகம் சாலையில் இருந்து, ஜிஎஸ்டி சாலைக்கு செல்ல வழி இல்லை. ராஜாஜி சாலை வழியாக ஜிஎஸ்டி சாலைக்கு பயணிகள் சுற்றி செல்லும் நிலையில் உள்ளனர். மேலும் ஏற்கனவே உள்ள சுரங்கப்பாதையின் நுழைவாயில் அமைந்துள்ள இடத்திலிருந்து இடிக்கப்பட்டு பின்னால் தள்ளிவைக்கப்பட உள்ளது. சண்முகம் சாலையிலிருந்து ஜிஎஸ்டி சாலைக்கு செல்ல 100 மீட்டர் கடந்து செல்வதற்கு போக்குவரத்து நெரிசலால் 10 நிமிடங்கள் ஆகிறது. எனவே, சுரங்பப்பாதையை விரிவுபடுத்தல் மற்றும் சாலை சந்திப்பை மேம்பாடுத்துதல் பணிகள் மேற்கொள்ளப்படும்.  இதனுடன் மழைநீர் வடிகால் அமைத்தல், நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெற உள்ளது. தாம்பரத்தின் முக்கிய பகுதி என்பதால் இரவு நேரங்களில் மட்டும் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.

Tags : Tambaram , 10 crore project works to solve the traffic congestion in Tambaram in response to the long-standing demand of the public
× RELATED தாம்பரம் அருகே உணவகத்தில் தீ விபத்து..!!