மாமல்லபுரம்: மணமை ஊராட்சியில், ரூ. 16 லட்சம் மதிப்பீட்டில் ஏரி பாசன கால்வாயை சீரமைக்கும் பணியினை கலெக்டர் ராகுல்நாத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாமல்லபுரம் அடுத்த மணமை ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கழனி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.16 லட்சத்தில் பெரிய ஏரி பாசன கால்வாய் சீரமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், மணமை ஊராட்சியில் கீழக்கழனி பகுதியில் நடந்து வரும் பெரிய ஏரி பாசன கால்வாய் சீரமைக்கும் பணியினை செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, அதே பகுதியில் பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தில் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, கீழக்கழனி பகுதியில் பெரிய ஏரி பாசன கால்வாயை இன்னும் அகலப்படுத்தி பணிகளை விரைந்து முடிக்கவும், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் மூலம் வீடுகள் கட்டும் பணி பாதியில் நிற்காமல் வேலைகள் சரியாக நடக்கிறதா? என கண்காணிக்கவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களின் வருகை பதிவேடு உள்ளிட்டவைகளை சரியாக பராமரிக்க வேண்டும் எனவும், மணமை ஊராட்சி நிர்வாகத்திற்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, மணமை ஊராட்சி தலைவர் செங்கேணி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
