திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அணுசக்தி துறையில் ஒப்பந்த ஓட்டுநர்கள் மத்திய பொதுப்பணித்துறை நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் சென்னை அணு மின் நிலையம், இந்திரா காந்தி ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம், பாவினி அதிவேக ஈணுலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகிறது. இப்பிரிவுகளில், பணிபுரியும் ஊழியர்களை அணுமின் நிலைய வளாகத்திற்கு ஏற்றி செல்லும் 30க்கும் மேற்பட்ட பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் கல்பாக்கம் பொதுப்பணி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.
இதில், பணிபுரியும் ஒப்பந்த ஓட்டுனர்களுக்கு தினமும் ரூ.800 சம்பளம் என்று வழங்க வேண்டிய நிலையில் ஒப்பந்ததாரர்கள் ஓட்டுனர்களுக்கு ரூ.650 மட்டுமே வழங்கி வருவதாகவும், முழு சம்பளத்தை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஓட்டுனர்களை காரணமின்றி பணி நீக்கம் செய்ததை கண்டித்தும் நேற்று ஒப்பந்த அடிப்படையிலான ஓட்டுனர்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று கல்பாக்கத்தில் உள்ள மத்திய பொதுப்பணி நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் நிர்வாகி பெருமாள், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் பழனிசாமி, பகவத் சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது பணி நீக்கம் செய்யப்பட்ட ஓட்டுனர்களை உடனடியாக பணியமர்த்தாவிட்டால் சுற்றுப்புற கிராம மக்களையும் பல்வேறு ஓட்டுநர் சங்கங்களையும் ஒன்று சேர்த்து மிகப்பெரிய போராட்டம் நடத்த போவதாக கூறினர்.
