×

அச்சிறுப்பாக்கம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்: பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்ற செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், ரயில் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.  சென்னை - திருச்சி ரயில் பாதையில் சென்னையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் அச்சிறுப்பாக்கம் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில்ந நிலையத்தை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. கிராம மக்கள் விளைவிக்கும் நெல், வேர்க்கடலை போன்றவை மட்டுமின்றி கத்தரி, வெண்டை, தக்காளி போன்ற காய்கறிகளும், மல்லி, சாமந்தி உள்ளிட்ட பல வகையான பூக்களும் இந்த ரயில்கள் மூலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்து வந்தனர்.  தற்போது, நிலைமையே வேறு மாதியாக உள்ளது. இதற்கு காரணம், இங்கு நின்று சென்ற பெரும்பாலான ரயில்கள் தற்போது  நிற்பதில்லை. இதனால்,  இப்பகுதி  விவசாயிகள் மட்டுமின்றி, இந்த ரயில் நிலையத்தை தினந்தோறும் பயன்படுத்தி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பணி நிமித்தமாக சென்று வந்த ஏராளமான இளைஞர்கள், பெண்கள், அரசு அலுவலர்கள், ஊழியர்கள் என பல தரப்பினரும் தற்போது மிகுந்த பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். இதனால், இவர்கள் நீண்டதூரம் சென்று மேல்மருவத்தூரில் இருந்து ரயில் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். தற்போது, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக சென்று வர வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  இப்பகுதி மக்களின் நன்மை கருதி மீண்டும் இந்த ரயில் நிலையத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது. மற்றொருபுறம் இந்த ரயில் நிலையம் மிகவும் வரலாற்று சிறப்புமிக்க ரயில் நிலையம் என்ற முக்கிய தகவல்களையும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை இப்பகுதி மக்களின் போக்குவரத்திற்கும் வாழ்வாதாரத்திற்கும் பேருதவியாக இருந்து வந்த இந்த ரயில் நிலையம் தற்போது ரயில்வே அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் கொஞ்சம் கொஞ்சமாக கைவிடப்பட்டு வருகிறது. இங்கே நின்று சென்ற பல ரயில்கள் தற்போது நிறுத்தப்படுவது இல்லை.  எனவே, ரயில்வே துறை உயர் அதிகாரிகள் இந்த வரலாற்று சிறப்புமிக்க ரயில் நிலையத்தினை ஆய்வு மேற்கொண்டு ரயில் நிலையத்தை மேம்படுத்தி தர வேண்டுமென கோரிக்கை வைக்கின்றனர். இது குறித்து அச்சிறுப்பாக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘சிறப்பு ரயில் மூலம் அச்சிறுப்பாக்கம் ரயில் நிலையம் வந்து தங்கிய காந்தியடிகள் மற்றும் ராஜாஜி, காமராஜர் ஆகியோர் பொதுமக்களிடையே தேசபக்தியூட்டும் உரையை நிகழ்த்தி சென்ற இடம் இது. எனவே, இந்த ரயில் நிலையத்தை மேம்படுத்தி சுதந்திர போராட்ட நினைவு ரயில் நிலையமாக மாற்றவேண்டும். மேலும், இவ்வழியாக செல்லும் சில ரயில்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ரயில் நிலையத்திற்கு மகாத்மா காந்தி பெயரை சூட்ட வேண்டும் என தெரிவித்தார்.     

* காந்தியடிகள் உரையாற்றிய நிலையம் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாக மகாத்மா காந்தியடிகள் இந்திய  தேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று மக்களிடையே இந்தியாவிற்கு  சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதற்கான எழுச்சி பிரசாரத்தை மேற்கொண்டு  வந்துள்ளார். அவ்வாறு, கடந்த 2.2.1946ம் ஆண்டு சென்னையில் இருந்து ரயில் மூலமாக  அச்சிறுப்பாக்கம் ரயில் நிலையத்திற்கு காந்தியடிகள் வந்துள்ளார். பின்னர்,  ரயில் நிலையம் அருகே அமைக்கப்பட்டு இருந்த மேடையில் இருந்து பொதுமக்களிடையே  சுதந்திரம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்த  பொதுக்கூட்டத்தில் அச்சிறுப்பாக்கம், மதுராந்தகம், செய்யூர், சூனாம்பேடு,  சித்தாமூர், தொழுப்பேடு, ஒரத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து  மாட்டு வண்டிகளிலும், நடந்தும் அச்சிறுப்பாக்கம் வந்த பல்லாயிரக்கணக்கான  மக்கள் காந்தியடிகளின் சுதந்திர குறித்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து  கொண்டுள்ளனர். அப்போது, அவருடன் காங்கிரஸ் கட்சியின் அப்போதைய மூத்த தலைவர்கள் ராஜாஜி,  காமராஜர் உள்ளிட்ட பலரும் வந்திருந்தனர். அங்கு காந்தியடிகளின் பேச்சு  தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு அதை கேட்ட மக்கள் ஆரவாரம் கொண்டு  ஆர்பரித்தனர்.  

இதற்கு முன்னதாக 12 வருடங்களுக்கு முன்பு 21.2.1934  இதே அச்சிறுப்பாக்கம் ரயில் நிலையத்தில் இறங்கி மகாத்மா காந்தி, மக்கள்  மத்தியில் உரையாற்றி சென்றுள்ளார். இவ்வாறு இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா  காந்தி இந்த பகுதி மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த ரயில்  நிலையத்தை பயன்படுத்தி சுதந்திர போராட்டத்தை தீவிரப்படுத்தி இருக்கிறார்.  இவ்வாறு வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த ரயில் நிலையத்தினை மேம்படுத்தி  காந்தியடிகள் பெயரை சூட்ட வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த சமூக  ஆர்வலர்களும் பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.


* மேம்பால  பணி மந்தம்  இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ஒரு காலத்தில் சிறப்புமிக்க ரயில் நிலையமாக விளங்கியது. தற்போது, அதிகாரிகளின் கவனக்குறைவு காரணமாக இங்கு போதிய வசதிகள் இல்லை. இந்த ரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்டும் பணிகள் தொடங்கி பல ஆண்டுகள் ஆகியநிலையில் இன்று வரை அந்த கட்டுமான பணிகள் நிறைவு பெறவில்லை.  அதிகாரிகள் கவனக்குறைவு என்பதற்கு இதுபோன்ற பல விஷயங்களை தெரிவிக்கலாம்.  இந்த ரயில் நிலையத்தில் குடிநீர் கழிவறை சுகாதார வசதிகள் போன்றவை இல்லாமல் மோசமான நிலையில் காணப்படுகிறது.  இதனை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


* மின்சார ரயில்கள் இயக்க வேண்டும்  அச்சிறுப்பாக்கம் ரயில் பயணிகள் கூறுகையில், ‘சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில்களில் சிலவற்றை மட்டும் குறிப்பிட்ட முக்கிய நேரங்களில் இந்த அச்சிறுப்பாக்கம் ரயில் நிலையம் வரை இயக்க வேண்டும். இதனால், இப்பகுதி மக்கள் மிகுந்த பயனடைவார்கள். ஏற்கனவே, இங்கு நிறுத்தப்பட்டு தற்போது நிற்காமல் செல்லும் ரயில்களையும் பழையபடி இங்கு நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.



Tags : Achirpakkam ,station , Action should be taken for all trains to stop at Achirpakkam railway station: demand of passengers, public
× RELATED முன்னாள் அமைச்சர் காலமானார்