×

பாஜவில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி விலகல்: அண்ணாமலை சர்வாதிகாரி போல செயல்படுவதாக குற்றச்சாட்டு

சென்னை: பாஜவில் இருந்து மேலும் ஒரு நிர்வாகி நேற்று விலகினார். அவர் பாஜ தலைவர் அண்ணாமலை சர்வாதிகாரி போல செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். தமிழக பாஜ ஐடி விங் தலைவராக இருந்த சி.டி.ஆர்.நிர்மல்குமார் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜவில் இருந்து வெளியேறினார். பின்னர் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். பாஜவில் இருந்து வெளியேறிய நிர்மல் குமார், தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை பற்றி பரபரப்பு குற்றச்சாட்டை அள்ளி வீசினார்.

அதாவது, பாஜ தலைவர் அண்ணாமலை, “மனநலம் குன்றிய மனிதனை போல செயல்படுகிறார். 420 மலையாக இருக்கும் அவரால் பாஜவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகப்பெரிய கேடு” என்றும் குற்றம் சாட்டினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மறுநாளே தமிழக பாஜவின் ஐடி விங் மாநில செயலாளர் திலிப் கண்ணனும் பாஜவில் இருந்து வெளியேறினார். அவரும் பாஜ தலைவர் அண்ணாமலை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். பாஜவில் இருந்து நிர்வாகிகள் விலகல் என்பது தொடர் கதையாக இருந்து வருகிறது. இது பாஜவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் மேலும் ஒரு நிர்வாகி ஒருவர் பாஜவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து பாஜவில் இருந்து வெளியேறிய சமூக ஊடக பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவு தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் ஆர்.பாக்கியராஜ் வெளியிட்ட அறிக்கை: தர்மபுரி, கிருஷ்ணகிரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட கோட்ட பொறுப்பாளர் (சமூக ஊடக பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவு) பதவியிலிருந்தும், பாஜ உறுப்பினரிலிருந்தும் மிக்க மகிழ்ச்சியுடன் ராஜினாமா செய்கிறேன். சி.டி.ஆர்.நிர்மல்
குமார், சமூக ஊடகங்களில் தன்னைவிட அபரிமிதமாக வளர்வதை அண்ணாமலையால் சகித்துக்கொள்ள முடியவில்லை. ஆதலால் அவரை வெளியேற்ற வேண்டும் என்ற ஒரே முடிவில் இருந்தார்.

ஏன் என்றால் தன் இடத்திற்கு வந்து விடுவார் என்ற அச்சம். அண்ணாமலை கடந்த பிப்ரவரி டெல்லி செல்வதற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பு ஐடி விங், விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகளிடம் சர்வாதிகாரி போல், அரசியல் முதிர்வு இல்லாமல் நடந்து கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பாஜவில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவதும், அவ்வாறு வெளியேறுபவர்கள் பாஜ தலைவர் அண்ணாமலை குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருவதும் பாஜவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சி.டி.ஆர்.நிர்மல் குமார், சமூக ஊடகங்களில் தன்னைவிட அபரிமிதமாக வளர்வதை அண்ணாமலையால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

Tags : Baja ,Anamalai , Another executive quits the BJP: Annamalai accused of acting like a dictator
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...