×

மனைவி, குழந்தைகளை கொன்று வங்கி ஊழியர் தற்கொலை செய்த வழக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனத்திற்கு சிபிசிஐடி நோட்டீஸ்: தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழப்பு ஏற்பட்டதால் மனைவி, மகன்களை கொன்று,  தனியார் வங்கி ஊழியர் தற்கொலை செய்தது தொடர்பாக மும்பையை சேர்ந்த கேம்ஸ் 24x7 நிறுவனத்திற்கு சிபிசிஐடி அனுப்பிய நோட்டீஸ் மீது எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழப்பு ஏற்பட்டதால், சென்னை பெருங்குடியில் வசித்து வந்த லண்டனை சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான மணிகண்டன் என்பவர் தனது மனைவி தாரகபிரியா, 11 வயது மகன் தாரன், ஒன்றரை வயது மகன் தாகன் ஆகியோரை கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து சந்தேக மரணம் என்று சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. இதுதொடர்பான விசாரணைக்காக, மணிகண்டனின் விளையாட்டு தொடர்பான விவரங்கள், விளையாட்டு மூலம் அவருக்கு கிடைத்த போனஸ், விளையாட்டின் மூலம் 3 லட்சத்து 28 ஆயிரம் சம்பாதித்த விவரங்கள், வருமான வரி பிடித்தம் தொடர்பான விவரங்கள் ஆகியவற்றை வழங்கக்கோரி மும்பையை சேர்ந்த 24x7 கேம்ஸ் என்கிற நிறுவனத்திற்கு சிபிசிஐடி கடந்த மாதம் 24ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

இதேபோல, சென்னை அண்ணா நகரை சேர்ந்த ரகுவரன் மரணம் தொடர்பாகவும் அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த இரு நோட்டீஸ்களையும் ரத்து செய்யவும், அவற்றிற்கு தடை விதிக்கவும் கோரி கேம்ஸ் 24x7 நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை தொடர்ந்துள்ளது. அந்த மனுக்களில், காவல்துறை கேட்ட விவரங்களை வழங்கி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள நிலையில், காவல்துறை உள்நோக்குடன் பொத்தாம் பொதுவாக விசாரணையை மேற்கொண்டுள்ளது.

பணம் வைத்து விளையாடும்படி யாரையும் வற்புறுத்தவில்லை. வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் தங்கள் பங்கு ஏதும் இல்லை. ரம்மி தடை சட்டத்தை தடை செய்யும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வியால் விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்துகிறார்கள். 2017 ஏப்ரலுக்கு பிறகு மணிகண்டன் தங்கள் தளத்தில் விளையாடவில்லை. 5 ஆண்டுகளுக்கு பிறகே தற்கொலை செய்து கொண்டார் என்று மனுவில் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணைக்காக தகவல்களை கேட்டு மட்டுமே சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளதால், தற்போதைய நிலையில் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது. இந்த வழக்கில்  தமிழ்நாடு அரசு, டிஜிபி, சிபிசிஐடி காவல்துறை ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : CBCID ,ICourt , Bank employee commits suicide by killing wife, children CBCID notice to online rummy game company: ICourt refuses to grant stay
× RELATED வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 3...