கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடியில் கட்டப்படும் நவீன பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும்: ஆய்வுக்குப் பின் அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடியில் கட்டப்பட்டு வரும் நவீன பேருந்து நிலையம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என ஆய்வுக்குப் பின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். சென்னை அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலை ஓரத்தில் கிளாம்பாக்கம் பகுதியில் 110 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் ரூ.393.74 கோடி மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையம் கடந்த 2019 முதல் கட்டப்பட்டு வருகிறது. தற்போது 90% பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை செயலாளர் அபூர்வா, வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ ஆகியோர் நேற்று காலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது, அமைச்சர் சேகர்பாபுவிடம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப்புத்தாண்டில் திறக்கப்படுமா அல்லது கலைஞர் பிறந்த தினமான ஜூன் 3ம் தேதி  திறக்கப்படுமா என்று நிருபர்கள் கேட்டனர்.

அப்போது அவர் கூறியதாவது: கடந்த ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று திறக்க வேண்டிய பேருந்து நிலையம் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் தள்ளிப்போனது. இந்த பணிகளை விரைந்து முடிக்கவும், மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டு வரவும் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. இதற்காக துறை செயலாளர், மெம்பர் செகரட்டரி மற்றும் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் மாதத்திற்கு 6 முறை ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. தற்போது, கட்டுமான பணிகளில் ஏற்பட்ட தொய்வை சரி செய்வதற்காக அதற்கு தேவையான உதவிகளை செய்யவும், கட்டுமான பணியை முழு வீச்சில் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளோம்.

மாதக்கணக்கில் அல்ல, வாரக்கணக்கில் அல்ல, நாட்கள் கணக்கில் நாலு கால் பாய்ச்சலில் பணிகள் முடிக்கப்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு தெரியப்படுத்தி முதல்வரால் பேருந்து நிலையம் விரைவில் திறந்து வைக்கப்படும். வயலூர் முருகன் கோயிலில் அனைவரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அடிப்படையில் 2 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். இதற்கு மதுரை நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்து 2 பேரையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதுகுறித்து விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், காட்டாங்கொளத்தூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர்கள் வி.எஸ்.ஆராமுதன், ஆப்பூர் சந்தானம், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம்.கே.டி.கார்த்திக் தண்டபாணி, ஊரப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பவானி கார்த்தி உள்பட வருவாய் துறை, சிஎம்டிஏ நிர்வாக அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

* கால தாமதம் செய்தால்...

கடந்த 2019 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 2021 டிசம்பர் மாதம் கட்டி முடிக்கப்பட வேண்டும். ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காலதாமதம் செய்த அதிகாரிகளையும், கட்டிட கான்ட்ராக்டர்களையும் அழைத்து துறை செயலாளர் அபூர்வா விசாரணை செய்தார். அப்போது, 25ம் தேதிக்குள் பணிகளை முடிக்க வேண்டும். அதுவரை யாரும் வீட்டுக்கு போகக்கூடாது. அதற்கான உணவு மற்றும் ஏற்பாடுகளையும் செய்து தருகிறேன். இதனையும் மீறி காலதாமதம் செய்தால் தயவுதாட்சண்யம் பார்க்க மாட்டேன். உங்களுடைய கான்ட்ராக்ட் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இருக்காது என்று எச்சரித்து சென்றார்.

* ஆக்கிரமிப்பு அகற்ற முடிவு

கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் ஜி.எஸ்.டி சாலை ஓரத்தில் உள்ளது. பேருந்து நிலையத்தின் பின்புறத்தில் உள்ள ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயஞ்சேரி வி.பி.கே நகர் வழியாக ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதனையும் துறை செயலாளர் அபூர்வா மற்றும் கலெக்டர் ஏ.ஆர்.ராகுல்நாத் நேரில் ஆய்வு செய்தனர். சாலையை விரிவாக்கம் செய்யவும், சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: