×

அரசு துறைகளின் இ-சேவை கட்டணத்தை எளிதாக செலுத்த தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஸ்டேட் வங்கி இடையே ஒப்பந்தம்

சென்னை: தற்போது அரசு துறைகள் மின்-ஆளுமை சேவை கட்டணத்தை பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் இருந்து பெறுவதற்காக பல்வேறு கட்டண  நுழைவு வாயில்களை பயன்படுத்தி வருகின்றன. தற்போது, பாரத ஸ்டேட் வங்கியின் “கட்டண திரட்டு செயலியான” SBIePAY-யை ஒற்றை தீர்வாக கண்டறிந்துள்ளது. SBIePAY ஒரு கட்டண திரட்டு செயலி ஆகும். இச்செயலி அனைத்து வகையான டெபிட் / கிரெடிட் கார்டுகள், யுபிஐ, பேமென்ட் பெட்டகம் மற்றும் இணைய வங்கி கட்டணங்களை வசூலிக்கவும், சேகரிக்கவும், ஒத்திசைவு செய்யவும் எளிதான ஒருங்கிணைந்த கட்டண இயங்கமைவு ஆகும்.

இது தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மற்றும் அரசு துறைகளின்  கட்டண செலுத்து முறைகளுக்கு எளிதான அமைப்பு ஆகும். பாரத ஸ்டேட் வங்கி இந்த சேவையை, சந்தை விலையைவிட குறைவாக, “உபயோகிப்பு அளவு” அடிப்படையில் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மற்றும் பாரத ஸ்டேட் வங்கியுடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அனைத்து அரசு துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் இந்த சேவையை காலதாமதமின்றியும் பணவிரயமின்றியும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று தமிழ்நாடு மின் ஆளுமை அலுவலகத்தில், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை செயலாளர் குமரகுருபரன், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை முதன்மை நிர்வாக அலுவலர் பிரவீன் நாயர், பாரத ஸ்டேட் வங்கி (சென்னை வட்டம்) தலைமை பொது மேலாளர் ராதாகிருஷ்ணா மற்றும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, பாரத ஸ்டேட் வங்கி  உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : State Bank of Tamil Nadu , Agreement between State Bank of Tamil Nadu E-governance Agency for easy payment of e-service fees of government departments
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...