×

12ம் வகுப்பு பொதுத்தேர்வு விதிமுறைகள்: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியீடு

சென்னை: நடப்பாண்டு 12ம் வகுப்பு பொது தேர்வின் விதிமுறைகள் குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 13ம் தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3ம் தேதி வரையும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 14ம் தேதி முதல் அடுத்த மாதம் 5ம் தேதி வரையும் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் பள்ளி மற்றும் தனித்தேர்வர்களாக 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ மாணவிகளும், 11ம் வகுப்பு பொதுத் தேர்வை 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவ மாணவிகளும் என மொத்தம் 16 லட்சத்து 39,367 பேர் எழுத இருக்கின்றனர். புதுச்சேரியில் 29 ஆயிரத்து 86 பேர் 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். இதில் 12ம் வகுப்பு தேர்வுக்காக 3,225 மையங்களும், 11ம் வகுப்பு தேர்வுக்காக 3 ஆயிரத்து 224 மையங்களும் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த தேர்வுகளுக்கான அறை கண்காணிப்பாளர்களாக 90 ஆயிரத்து 70 பேரும், பறக்கும் படை உறுப்பினர்களாக தலா 3 ஆயிரத்து 100 பேரும், நிலையான படை உறுப்பினர்களாக 2 ஆயிரத்து 269 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு அறிவுரைகள்: மொத்தம் தேர்வு எழுத உள்ள 16 லட்சத்து 39 ஆயிரத்து 367 பேரில், அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 10 லட்சத்து 35 ஆயிரத்து 962 பேரும், வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 4 லட்சத்து 94 ஆயிரத்து 222 பேரும், கலை பாடத் தொகுதியின்கீழ் 26 ஆயிரத்து 975 பேரும், தொழிற்கல்வி பாடத்தொகுதியின்கீழ் 82 ஆயிரத்து 208 பேரும் அடங்குவார்கள். சென்னையில் மட்டும் தலா 180 மையங்களில் 88 ஆயிரத்து 104 மாணவ மாணவிகள் 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ளனர். சிறைவாசி தேர்வர்களாக 215 பேர் வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புழல் சிறைகளில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வை எழுதுகின்றனர்.

தேர்வெழுத இருக்கும் பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் சிறப்பு அறிவுரைகளுடன் அச்சிடப்பட்டு இருப்பதாக அரசு தேர்வுத் துறை தெரிவித்துள்ளது. ஏற்கனவே வினாத்தாள், விடைத்தாள்களில் அச்சிடப்படும் இந்த அறிவுரைகள் தேர்வுக்கு முன்னதாகவே ஹால்டிக்கெட்டில் இந்த முறை அச்சிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்கள், கருத்துகள், தகவல்களுக்கு அரசு தேர்வுகள் இயக்ககத்தில் தேர்வு கட்டுப்பாட்டு அறை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளது. 9498383081, 9498383075 என்ற எண்களில் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளலாம்.

* செல்போன் எடுத்து வர தடை
பொதுத் தேர்வுகளுக்கு 281 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களும், ஆசிரியர்களும் தேர்வு அறைகளில் செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது. அவ்வாறு இந்த அறிவுரையை மீறி தேர்வர்களோ, ஆசிரியர்களோ செல்போன் மற்றும் இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்வில் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வித்துறை அறிவித்திருக்கிறது.

Tags : 12th Class General Exam Rules: Directorate of Government Examinations Notification Release
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...