எச்3என்2, கொரோனா பாதிப்புகளை கண்டு அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: எச்3என்2 வகை வைரஸ் காய்ச்சல் மற்றும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியிருப்பதை கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை என மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. அதைதொடர்ந்து சைதாப்பேட்டை, திடீர் நகரில், காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாமினை மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர்  பிரியா, நோய் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக்  கல்வி இயக்குநர் சாந்திமலர், மண்டல குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி,  நிலைக்குழுத் தலைவர் சாந்தகுமாரி, மாமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மற்றும் உயர்  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: நாடு முழுவதும் எச்3என்2 வைரஸ் காய்ச்சல் பரவிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. அனைத்து மருத்துவமனைகளில் தேவையான அளவு மருந்துகள் மற்றும் மாத்திரைகள் கையிருப்பில் உள்ளது. தற்போது இந்த காய்ச்சல் பாதிப்புகள் பெரிய அளவில் பதிவாகவில்லை. மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்கின்ற சூழலும் தற்போது இல்லை. எனவே பெரிய அளவில் அச்சம் கொள்ள தேவையில்லை. ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின்படி இந்த வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருக்க, பாதிக்கப்படும் நபர்கள் 4 நாட்கள் வீட்டில் தங்களை தனிமைபடுத்திக்கொண்டால் குணமடையலாம்.

மேலும், கொரோனா விதிமுறைகளை கடைபிடித்தாலே இந்த வைரஸ் காய்ச்சல்களை கட்டுப்படுத்த முடியும். தற்போது உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. இவை அனைத்தும் ஏற்கனவே தமிழ்நாட்டில் நிலவிக்கொண்டிருந்த மிதமான வகையில் பாதிப்புகளை ஏற்படுத்திய ஓமிக்ரான் வகை உருமாறிய கொரோனா வகையாகும், அதனால் பெரிய அளவில் அச்சம் கொள்ள தேவையில்லை. தற்போது கூடுதல் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் இந்த பாதிப்பு எண்ணிக்கை கூடிக்கொண்டிருக்கிறது. 2022 மார்ச் மாதத்திற்கு பிறகு 2 பேர் என்கின்ற அளவில் இருந்த பாதிப்புகள் தற்போது 25 பேர் என்ற அளவில் இருந்தாலும் இது மிதமான வகை வைரஸ் பாதிப்புகள் என்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: