×

இந்து கோயில்கள் மீது தாக்குதல் ஆஸி. பிரதமரிடம் மோடி கவலை

புதுடெல்லி: இரு தரப்பு உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது, ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள் மீதான தாக்குதல் குறித்து பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிசிடம் கவலை தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ் 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். குஜராத், மும்பையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் நேற்று டெல்லி ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி, அல்பானிசை வரவேற்றனர்.

இதை தொடர்ந்து ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அல்பானிஸ் மரியாதை செலுத்தினார். பின்னர் ஐதராபாத் இல்லத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான வருடாந்திர கூட்டம் நடந்தது. இதில் முதல் முறையாக இரு நாட்டு பிரதமர்களும் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, அல்பானிஸ்   பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சமீப காலத்தில் ஆஸ்திரேலியாவில் கோயில்கள் மீதான தாக்குதல் குறித்து பிரதமர் மோடி தனது கவலையை தெரிவித்தார்.

பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக அளித்த பேட்டியில், பிரதமர் மோடி கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் கோயில்கள் மீதான தாக்குதல் குறித்த செய்திகள் இந்தியாவில் உள்ள அனைவரையும் கவலை அடையச் செய்துள்ளது. இந்த உணர்வுகள், கவலைகளை பிரதமர் அல்பானிசிடம் தெரிவித்தேன். இந்தியர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதற்கு சிறப்பு முன்னுரிமை வழங்கப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். இந்த விஷயத்தில் இந்தியா வழக்கமான தொடர்பில் இருக்கும். எங்கள் முழு ஒத்துழைப்பை தருவோம். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு மற்றும் பரஸ்பர பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆஸ்திரேலிய பிரதமருடன் ஆலோசித்தேன்.

உலகளாவிய நம்பகமான மற்றும் வலுவான விநியோக சங்கிலியை உருவாக்குவதில் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து நாங்கள் விவாதித்தோம். பாதுகாப்புத் துறையில், கடந்த சில ஆண்டுகளில் தளவாட ஆதரவு உள்ளிட்ட குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்களை நாங்கள் செய்துள்ளோம். அதே போல் இன்று, விளையாட்டு மற்றும் ஆடியோ-விஷுவல் இணைந்து தயாரிப்பது மற்றும் சோலார் பணிக்குழு விதிமுறைகள் ஆகியவற்றில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இரு நாடுகளும் ஒரு விரிவான பொருளாதார ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான முயற்சிகளை எடுத்து வருகின்றன. இரு தரப்பு உறவில், பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கிய தூணாக உள்ளது. இவ்வாறு கூறினார்.

Tags : Aussie Modi ,PM , Attack on Hindu Temples in Aussie Modi is worried about PM
× RELATED ஐதராபாத்தில் பேருந்து சேவை குறைப்பு!!