×

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இயற்ற சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது: ஆளுநருக்கு சபாநாயகர் பதில்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா இயற்றுவதற்கு தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது என ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக, சென்னை, தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 2022 அக்டோபர் 1ம் தேதி ஒரு அவசர சட்டம் தமிழக அரசால் ஆளுநருக்கு அனுப்பப்படுகிறது. இது இணையவழி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்பதற்கான அவசர சட்டம். அதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதே மாதம் 19ம் தேதி சட்டமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று சட்டமுன்வடிவு கொண்டு வரப்பட்டு, அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

ஆனால் இந்த சட்டத்தை கடந்த 4 மாதத்திற்கும் மேலாக ஆய்வு செய்தார். அவசர சட்டத்துக்கும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவுக்கும் எந்த மாற்றமும் இல்லை. அதை அவர் திருப்பி அனுப்பி உள்ளார். அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டு மசோதாவுக்கு ஆளுநர் எதிர்ப்பு காட்டுவது ஏன்? ஆளுநருக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது? ஆளுநர் மாநில அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்ற அதிகாரம் இல்லை என்பதை ஆளுநர் எந்த சட்டத்தை வைத்து சொன்னார் என்று தெரியவில்லை. சட்டமன்றம் புனிதமானது, அதற்கு களங்கம் ஏற்படும் வார்த்தையை அவர் தவிர்த்து இருக்கலாம். அரசியல் சட்டத்தின் 200வது பிரிவை ஆளுநர் படிக்க வேண்டும்.

நாடு முழுவதும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று தமிழக எம்பிக்கள் உள்ளிட்ட பல மாநில எம்பிக்கள் மக்களவையில் பேசினார்கள். அப்போது துணை ஜனாதிபதியாக இருந்த வெங்கய்யா நாயுடு பதில் அளித்து பேசும்போது, இது மிக முக்கியமான விஷயம். ஆகவே நம்முடைய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் சட்டத்துறையுடன் கலந்து பேசி சரியான முடிவு எடுக்க வேண்டும். இது ஸ்கில் கேம் அல்ல, கில்ட் கேம் என்று கூறினார். ஆன்லைன் சூதாட்ட தடை விவகாரம் மாநில பட்டியலில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் பட்டியலில்தான் உள்ளது என்று ஒன்றிய  அமைச்சர் நாடாளுமன்றத்திலேயே தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி தெளிவாக சொல்லி இருக்கிறார். இதையெல்லாம் தமிழக ஆளுநர் படித்திருந்தால் மசோதாவுக்கு ஒப்புதல் தந்திருக்கலாம். 2022 அக்டோபர் மாதம் 19ம் தேதி சட்டமன்றத்தில் கொண்டு வரும்போது எடுத்தோம், கவிழ்த்தோம் என்று மசோதா கொண்டு வரவில்லை. தமிழகம் முழுவதும் 10,708 பேரிடம் கருத்து கேட்டு, அதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு அறிக்கை தாக்கல் செய்தபிறகுதான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதையெல்லாம் ஆளுநர் பார்த்திருக்க வேண்டும். ஆளுநர் இரண்டு வகையான நிலைப்பாடு கொண்டுள்ளார். அவருக்கு எங்கிருந்து என்ன அழுத்தம் வந்ததோ தெரியவில்லை. ஆன்லைன் ரம்மி நடத்துபவர்கள் ஆளுநரை சந்தித்ததாக செய்திகள் வந்தது. நமது சட்டத்துறை அமைச்சர் ரகுபதியும் ஆளுநரை சந்தித்து மசோதா குறித்து விளக்கம் அளித்தார். சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததற்கு அவருக்கு ஏதோ அழுத்தம் இருப்பதால்தான் இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டை தமிழக ஆளுநர் எடுத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் மனதில் சட்டத்தை ஏற்றுக்கொள்வதாக நினைத்திருப்பார் என்றே நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

* அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துவிட்டு மசோதாவுக்கு ஆளுநர் எதிர்ப்பு காட்டுவது ஏன்? ஆளுநருக்கு எங்கிருந்து  அழுத்தம் வந்தது?
* ஆளுநர் மாநில அமைச்சரவையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்  என்று உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
* இந்த சட்டத்தை தமிழக  சட்டமன்றத்தில் நிறைவேற்ற அதிகாரம் இல்லை என்பதை ஆளுநர் எந்த சட்டத்தை  வைத்து சொன்னார் என்று தெரியவில்லை.


Tags : Governor , Legislature Has Power to Enact Online Gambling Ban: Speaker's Reply to Governor
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...