×

சிவகங்கையில் ஓபிஎஸ் அணியின் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு!

மதுரை: சிவகங்கையில் இபிஎஸ் அணி சார்பில் சனிக்கிழமை (11.03.2023) பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு இடத்தில் ஓபிஎஸ் அணி ஆர்ப்பாட்டம் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரண்மனை வாசல் அருகே அதிமுக ஒன்றிணைய வலியுறுத்தியும், எடப்பாடி பழனிச்சாமியின் சர்வாதிகார போக்கை கண்டித்தும் ஓபிஎஸ் அணி சார்பில் நாளை (11.03.2023) காலையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் 2017ல் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில் 2022-ல் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிராக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. அதிமுகவில் நிலவும் குழப்பம் காரணமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக பரிதாபகரமாக தோல்வியடைந்தது.

இதனால் அதிமுகவில் ஒன்றிணைப்பை வலியுறுத்தியும், எடப்பாடி பழனிச்சாமியின் சர்வாதிகார போக்கை கண்டித்தும் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க சிவகங்கை டிஎஸ்பிக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், கீழ்பாத்தியில் சனிக்கிழமை மாலையில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்கும் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி வருகையை கண்டித்து ஓபிஎஸ் அணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டள்ளது. இந்த சூழலில் இபிஎஸ் அணியின் பொதுக்கூட்டம் நடைபெறும் அதே நாளில் ஓபிஎஸ் அணியின் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்கினால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்றார். மூத்த வழக்கறிஞர் கே.செல்லப்பாண்டியன் வாதிடுகையில், ஓபிஎஸ் அணிக்கு ஆட்சியர் அலுவலகம் அல்லது சந்திரா பூங்கா அருகே காலை 11 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியுள்ளோம்.

நாங்கள் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கோரிய இடமும், இபிஎஸ் அணி பொதுக்கூட்டம் நடைபெறும் இடமும் வேறு. இதனால் ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்றார். இதையடுத்து நீதிபதி, மனுதாரரிடம் ஆர்ப்பாட்டத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படாது என உறுதிமொழி பத்திரம் வாங்கிக்கொண்டு, நிபந்தனைகளின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Tags : OPS ,Sivaganga ,Madurai Branch , Permit for demonstration of OPS team in Sivagangai: Madurai branch order of High Court!
× RELATED பா.ஜ.க. கூட்டணியில் எத்தனை தொகுதிகளை ஏற்பது?-ஓ.பி.எஸ்.ஸுக்கு அதிகாரம்