குமரி மாவட்டத்தில் அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தினால் பறிமுதல்: கலெக்டர் எச்சரிக்கை

நாகர்கோவில்: குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: குமரி மாவட்டத்தில் மதம் சார்ந்த விழாக்கள் நடக்கும் பொது இடங்கள், வழிபாட்டு இடங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது. ஓலி பெருக்கி பயன்படுத்த காவல் நிலையங்களில் உரிய அனுமதி பெற்று குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பயன்படுத்த வேண்டும். அனுமதி பெறப்பட்ட நேரத்தை தவிர்த்து பிற நேரங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தக்கூடாது. முதியவர்கள், குழந்தைகள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், நோயாளிகள், மாணவ, மாணவிகள் ஆகியோரின் நலனை கருத்தில் கொண்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஒலி பெருக்கிகள் பயன்படுத்த வேண்டும்.

அதிக ஒலி எழுப்பும் ஒலி பெருக்கி வைத்திருந்தால் ஒலி மாசு விதி 2000 உட்பிரிவு 3(1)-ன் படி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அமைதி மண்டலம் என்பது ஆஸ்பத்திரி, கல்வி நிறுவனம், கோர்ட் ஆகியவற்ைற சுற்றி 100 மீட்டருக்கு உட்பட்ட பகுதியாகும். இங்கு ஒலி மாசு (ஒழுங்குமுறை, கட்டுப்பாடு) விதி 2000ல் சுற்றுப்புற ஒலியின் தரநிலை வகுக்கப்பட்டு உள்ளது. அதன்படி வணிக பகுதியில் பகல் நேரத்தில் 65 டெசிபல், இரவில் 55 டெசிபல், குடியிருப்பு பகுதி பகலில் 55, இரவில் 45, அமைதி மண்டலம் பகலில் 50, இரவில் 40 டெசிபல் ஒலி அளவுஅனுமதிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளிக்க பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 43- ன் படி உரிமை உள்ளது. இவ்வாறு வரும் புகார்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, ஒலி மாசு மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: