×

மாஞ்சோலை அருகே முள்ளம்பன்றியை சாப்பிட்டதால் செரிக்காமல் உயிரிழந்த சிறுத்தை: பிரேத பரிசோதனைக்கு பின் தகனம்

நெல்லை: நெல்லை மாவட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாகும். இப்பகுதியில் உள்ள அம்பை வனச்சரகம், மாஞ்சோலை அருகே நாலுமுக்கு தேயிலைத் தோட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு இறந்த நிலையில் சிறுத்தை சடலம் கிடந்தது. இதையடுத்து அம்பை வனச்சரக அலுவலகர் நித்யா மற்றும் வனத்துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது இறந்த சிறுத்தை ஆண் சிறுத்தை என்பதும், அதற்கு 13 வயது இருக்கலாம் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து இறந்த சிறுத்தை உடல் கால்நடை டாக்டர் மனோகரன் மற்றும் குழுவினர் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது இறந்த சிறுத்தை முள்ளம்பன்றியை உட்கொண்டதால், சீரணம் ஆகாமல் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அம்பை. கோட்ட புலிகள் காப்பக துணை இயக்குநர் செண்பகப்பிரியா, வனச்சரக அலுவலர் நித்யா, வனவர் முருகசேன் மற்றும் வனத் துறையினர் முன்னிலையில் அடர்ந்த வனப்பகுதியில் வைத்து சிறுத்தை உடல் எரியூட்டப்பட்டு தகனம் செய்யப்பட்டது. கடந்த 4ம் தேதி இதே நாலுமுக்கு தேயிலைத் தோட்டப் பகுதியில் தேயிலை பறிக்கச் சென்ற ஜெஸ்ஸி என்ற பெண் தோட்டத் தொழிலாளியை சிறுத்தை தாக்கியது.

இதில் ஜெஸ்ஸி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெஸ்ஸியை தாக்கியது இறந்த சிறுத்தை தான் எனவும், அந்த சிறுத்தை விஷம் வைத்து கொல்லப்பட்டதாகவும் தகவல் பரவியது. ஆனால் பெண் தோட்டத் தொழிலாளியை தாக்கியது நடுத்தர வயதுடைய பெண் சிறுத்தை எனவும், இறந்தது 13 வயது கொண்ட ஆண் சிறுத்தை எனவும் வனத் துறையினர் தெளிவுபடுத்தியுள்ளனர். இதனால், இறந்த சிறுத்தையின் மர்மம் முடிவுக்கு வந்துள்ளது.

Tags : Leopard ,Mancholai , Leopard that died of indigestion after eating a porcupine near Mancholai: cremated after post-mortem
× RELATED திருப்பதி மலைப்பாதையில் மீண்டும்...