பெங்களூரு: மின் தட்டுப்பாடு காரணமாகவே மக்கள் தொகை அதிகரித்துள்ளது என ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளது. பாஜக ஆட்சி நடக்கும் தற்போது நிலையில் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள சூழலில், பாஜகவும், காங்கிரசும் போட்டி போட்டு களத்தில் இறங்கியுள்ளனர். காங்கிரசு மின்சாரம், கல்வி உள்ளிட்ட பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பிரச்சாரம் செய்து வருகின்றன. இதற்கு போட்டியாக பாஜக வும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் தற்போது இருந்தே தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
ஹஸ்சன் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்; கர்நாடகாவில் தற்போது இலவச மின்சாரம் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். காங்கிரஸ் ஆட்சியின் போது, போதிய அளவு மின்சாரம் வழங்கப்படவில்லை. கிராமங்களில் மின்சாரம் இருந்ததில்லை. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகே 24 மணி நேர மின்சாரம் கொடுக்க முடிந்தது. காங்கிரஸ் குறைவான மின்சாரத்தை வழங்கியதால் தான் மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது. இது தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
