அரசுப் பேருந்துகள் எந்த சூழ்நிலையிலும் தனியார் மயமாக்கப்படாது: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்த தொழிற்சங்கத்தினர்

சென்னை: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், எந்த சூழ்நிலையிலும் தனியார் மயமாக்கப்படாது என தெரிவித்துள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் தலைமையில் 09.03.2023 அன்று மாலை நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் தொழிற்சங்கத்தினர் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்துத் தொழிற்சங்க கூட்டமைப்பு, சென்னை சார்பாக போக்குவரத்துத்துறை சார்ந்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், 09.03.2023 அன்று மாலை சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் தொழிற்சங்கங்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மற்றும் போக்குவரத்துக் கழக உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். இதில், தொ.மு.ச சார்பில் சண்முகம் முதன்மை கோரிக்கையாக போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்குவதை (Gross Cost Contract) ரத்து செய்தல், ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின்போது அளிக்கப்பட்ட கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுதல் மற்றும் எங்களது கோரிக்கையில் சமர்ப்பித்துள்ள அரசு ஆணை 321 முதல் 328-வரை ரத்து செய்திட வேண்டும் என தெரிவித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, சி.ஐ.டி.யு. சார்பில், போக்குவரத்துக் கழகத்தில் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்குவதற்கு, அரசு ஆணை 321 முதல் 328-ரத்து செய்து,  புதிய அரசு ஆணை வாயிலாக பணியாளர்களை முறையாக தேர்வு செய்தல், பிற மாநிலங்களை ஒப்பிட்டு பார்த்தால் மின்சாரப் (E-Bus) பேருந்துகளை தமிழ்நாட்டில்  பயன்படுத்துவதால் போக்குவரத்துக் கழகத்திற்கு நஷ்டம் ஏற்படும் எனவும், போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு D.A. நிலுவைத் தொகை வழங்குதல், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சலுகை அட்டை வழங்குதல் மற்றும் GCC முறை எவ்வாறு நடைமுறைபடுத்தப்படும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தெரிவித்தார்கள். இறுதியாக அனைத்துத் தரப்பு தொழிற்சங்கத்தினர்களின் கோரிக்கைகளை கேட்ட பின்னர், போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள், போக்குவரத்துக் கழகத்தை தனியார் மயமாக்குதல் என்ற பேச்சிற்கே இடமில்லை எனவும், போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு இதில் எவ்வித ஐயப்பாடும் வேண்டாம் எனவும் தெரிவித்தார்கள்.

மேலும், உலக வங்கியின் கருத்துருப்படி, GCC முறையில் மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்து ஒப்பந்த அடிப்படையில் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்து வழித்தடங்களில் செயல்படுத்துவது தொடர்பாக நிபுணர் குழு பரிந்துரைக்கு மட்டுமே, ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தனி கவனத்திற்கு தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை கொண்டு சென்று, நன்கு ஆராய்ந்து படிப்படியாக முறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், 500 புதிய மின்சாரப் பேருந்துகளில், நகரப் பயன்பாட்டில் பயன்படுத்தப்படும் பேருந்துகளில் (சாதாரண நகரக் கட்டணப் பேருந்து) மகளிருக்கான கட்டணமில்லா பயணம் தொடர்ந்து நடைமுறைபடுத்தப்படும் என தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து பேசிய தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்துத் கழகங்கள் எந்த சூழ்நிலையிலும் தனியார் மயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது.

போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு எவ்வித பணி பாதிப்பும் ஏற்படாது என்றும் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியினையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள். இந்த கலந்தாய்வு கூட்டத்தில், தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை (LPF), தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (CITU), தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்ளின் தொழிலாளர்கள் சம்மேளனம் (AITUC), இந்திய தேசிய போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் (INTUC), தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் பேரவை (HMS), தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர் சம்மேளனம் (TTSF), மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி (MLF), அறிவர் அம்பேத்கர் போக்குவரத்து தொழிலாளர் விடுதலை முன்னணி (AALLF) மற்றும் திராவிடர் தொழிலாளர் கழகப்பேரவை (DWU) ஆகிய தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: