திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் ரெட்டியார்சத்திரம், அய்யலூர், வடமதுரை, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், பழநி, தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிகளவில் சாகுபடி நடைபெறுகிறது. திண்டுக்கல் மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.20 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில் ரெட்டியார்சத்திரம் அருகே கே.புதுக்கோட்டை பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட தக்காளி செடிகள் வெம்பல் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் பனிப்பொழிவும், பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதனால் நன்றாக விளைந்த தக்காளிகள் அறுவடைக்கு முன்பே செடிகளில் அழுகி விடுகின்றது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.தக்காளியை பறிப்பதற்கான கூலி, அதை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்கான வாகன செலவுக்கான தொகை கூட கிடைக்கவில்லை என புலம்புகின்றனர். இதனால் பல இடங்களில் விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடிகளிலே விட்டு விட்டனர். மேலும் இதற்கு நிவாரண வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து விவசாயி ராஜகோபால் கூறியதாவது, ‘ஒரு ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டேன். கடந்த சில நாட்களாக வெயிலில் தாக்கம் அதிகமாக உள்ளதால் தக்காளியில் வெம்பல் அழுகல் நோய் தாக்கி செடியிலேயே பறிக்க முடியாமல் உள்ளது. ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து பயிரிட்டோம். ஆனால் கூலிக்கு கூட விலை கிடைக்காததால் செடியிலேயே அழுகி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’ என்றார்.