×

தேவதானப்பட்டி அருகே ஜெயமங்கலத்தில் நெல் அறுவடை பணிகள் தீவிரம்

*விற்பனைக்குரிய சான்றிதழை விரைந்து வழங்க கோரிக்கை

தேவதானப்பட்டி : தமிழக-கேரள எல்லைப்பகுதியில் உள்ளதால் தேனி மாவட்டம், மலைகள் சூழ்ந்து பசுமையாகவும், சில்லென்ற சீதோஷ்ண நிலையும் இருப்பதன் காரணமாக பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள தேவதானப்பட்டி, கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது.

தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும், மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான, கொள்கைகளும், நோக்கங்களும் அரசால் வகுக்கப்படுகின்றன. இதில் விவசாயிகளுக்காகவும், விவசாயத்தைத காக்கவும் உள்ள அரசாக, திமுக அரசு தற்போது தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் விவசாயிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை மானியத்துடன் அறிவித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பெரியகுளம் வராகநதி ஆற்றுப்பாசனம் மூலம் மேல்மங்கலம், அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, சில்வார்பட்டி, ஜெயமங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், அ.வாடிப்பட்டி உள்ளிட்ட நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதே போல் தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை பாசனம் மூலம் தேவதானப்பட்டி, அட்டணம்பட்டி, மஞ்சளாறு அணை கிராமம், செங்குளத்துப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, எருமலைநாயக்கன்பட்டி, டி.வாடிப்பட்டி உள்ளிட்ட இடங்களில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

பெரியகுளம் வராகநதி ஆற்றுப்பாசனம் மற்றும் தேவதானப்பட்டி மஞ்சளாறு ஆற்றுப்பாசனம் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஐ.ஆர்.,64, என்எல்ஆர், எம்டியூ-1262, உள்ளிட்ட ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் ஐ.ஆர்.,64 மற்றும் என்எல்ஆர் ரகங்கள் 120 நாட்கள் ஆகும். எம்டியூ-1262 ரகம் 140 நாட்கள் ஆகும். நடப்பாண்டில் பருவமழை ஆரம்பத்தில் இருந்து நல்லமுறையில் பெய்து கண்மாய்கள் நிரம்பியது.

இதனால் வழக்கத்தைவிட அதிகளவில் நடப்பாண்டில் சாகுபடி செய்யப்பட்டது. பெரியகுளம் வராகநதி ஆற்றுப்பாசனம் மூலம் ஜெயமங்கலம், மேல்மங்கலம், அழகர்நாயக்கன்பட்டி, நல்லகருப்பன்பட்டி, சில்வார்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 3ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஜெயமங்கலம் பகுதியில் ஐ.ஆர்.,64, என்எல்ஆர், எம்டியூ-1262, உள்ளிட்ட ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

மேல்மங்கலம் மற்றும் அழகர்நாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் நெல் அறுவடை பணி தொடங்கியுள்ளது. விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேல்மங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு நெல்லை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதே போல் ஜெயமங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் மற்றும் கெங்குவார்பட்டியில் அரசு நேரடி நெல் கொள்முதல் உள்ளது.

இதில் மேல்மங்கலம் கிராமத்தில் தான் முதலில் அறுவடை பணி தொடங்கியது. தற்போது ஜெயமங்கலம் பகுதியில் விவசாயிகள் நெல் அறுவடை பணியினை தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த பகுதியில் அறுவடை செய்யும் நெல்லை மேல்மங்கலத்தில் உள்ள அரசு நெல் நேரடி கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.
 மேலும் விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு கொண்டு செல்ல உரிய சான்றிதழ்களை வருவாய்த்துறையினர் சுணக்கமின்றி வழங்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Jayamangalam ,Devadhanapatti , Devadanapatti: Located on the Tamil Nadu-Kerala border, Theni district is surrounded by mountains and has a cool climate.
× RELATED ஓடை உடைப்புகளை சரி செய்ய கோரிக்கை