×

பல்லடத்தில் தெரு நாய்களை பராமரிக்கும் போக்குவரத்து பணியாளர்

பல்லடம் : பல்லடத்தில் தெரு நாய்களை அரசு போக்குவரத்து கழக தற்காலிக பணியாளர் ராஜன் பிடித்து சென்று உணவு அளித்து பராமரித்து வருகிறார்.நகர் பகுதிகளில் சுற்றி திரியும் தெரு நாய்களால் தொல்லை அதனை பிடித்து செல்ல வேண்டும் என்பதே பல்வேறு இடங்களில் ஒலிக்கும் குரலாக இருக்கிறது. அதே சமயம் தெரு நாய்களால் தொல்லை இல்லை, எத்தனை தெரு நாய்களை வேண்டுமானாலும் என்னிடம் ஒப்படையுங்கள் அதனை நான் உணவு அளித்து பராமரித்துக் கொள்கிறேன் என்கிறார் பல்லடம் அரசு போக்குவரத்து கழக கிளையின் தற்காலிக நேர காப்பாள பணியாளர் ராஜன் (43).இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

 எனது சொந்த ஊர் பெருமாநல்லூர். நான் 17 ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்தேன். உணவிற்காக தெரு நாய்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருப்பதை நான் கண்டேன். அவற்றுக்கு ஒரு வேளை உணவு கொடுத்தேன். அவை அதனை உட்கொண்டு விட்டு படுத்து உறங்க ஆரம்பித்து விட்டது. வீட்டு வளர்ப்பு நாய்களுக்கு வேளை, வேளைக்கு உணவு, பிஸ்கட், பால் என்று அனைத்தும் கிடைத்து விடுகிறது. அவை சொகுசு வாழ்க்கை வாழ்கின்றன.

அதே சமயம் தெரு நாய்கள் உணவு கிடைக்காமல் அலைந்து திரிவதை கண்டு எனது மனம் வேதனை அடைந்தது. இதனால், தெரு நாய்களை பராமரிக்க அன்றே முடிவு செய்து எனக்கு கிடைக்கும் குறைந்த ஊதியத்தில் முதலில் கண்ணில் தென்படுகின்ற தெரு நாய்களுக்கு பால், பிஸ்கட்களை வழங்கி வந்தேன். ஆனால், அவை போதவில்லை என்பது தெரியவந்தது. அதனால், அவற்றுக்கு ஒரு வேளையாவது சாப்பாடு வழங்க முடிவு செய்து எனது மனைவியிடம் தெரிவித்தேன்.

அவரும் வாயில்லா ஜீவனுக்கு உணவு வழங்குவது பெரிய புண்ணியமான காரியம் என்று சொல்லி என்னை ஊக்கப்படுத்தியதோடு அதிகாலையில் 5 கிலோ அரிசி போட்டு சாப்பாடு தயார் செய்து பெரிய தூக்கில் போட்டு தந்துவிடுவார். அதனை எடுத்து வந்து 3 லிட்டர் தயிர் வாங்கி தயிர் சாதமாக என்னுடைய பராமரிப்பில் உள்ள 10 ஆண், 30 பெண் நாய்களுக்கு உணவு அளித்து விடுவேன்.

இந்த 15 ஆண்டு காலத்தில் நீண்ட தூர பயணமாக நான் சென்றது இல்லை. அவ்வாறு சென்றாலும் நாய்களுக்கு உணவு அளித்து விட்டு தான் செல்வேன். ஒரு நாளும் உணவு வழங்காமல் இருந்தது இல்லை. வேறு யார் கொடுத்தாலும் என்னுடைய நாய்கள் சாப்பிடாது. அவைகளுக்கு தனித்தனியாக பெயர் வைக்கவில்லை என்னுடைய குரலுக்கு மட்டுமே அவை கட்டுப்படும்.
மேலும் பெடிகிரி பிஸ்கட் ஊட்டச்சத்து மருந்து போன்றவை வழங்கி வருகிறேன். அவற்றுக்கு எதாவது நோய் வந்தால் தனியார் கால்நடை மருத்துவர் மூலம் சலுகை கட்டணத்தில் சிகிச்சை மற்றும் மருந்துகள் வாங்கி கொடுத்து வருகிறேன்.

பார்வோ வைரஸ் தாக்கி சில நாய்கள் இறந்து விட்டன. அவற்றின் உயிரிழப்பு என்னை மிகவும் வருத்தம் அளிக்க செய்தது. அதைத்தொடர்ந்து அனைத்து நாய்களுக்கும் வெறிநோய் தடுப்பூசி முதல் அனைத்து தடுப்பூசிகளும் முன்னெச்சரிக்கையாக போட்டுள்ளேன். ஆதரவற்ற முதியோர்களுக்கு காப்பகம் இருப்பது போல் ஆதரவற்ற தெரு நாய்களுக்கும் காப்பகம் அமைக்க வேண்டும் என்பதே எனது இலக்காக உள்ளது.

இதற்காக, கடனுக்காவது இடம் வாங்கி மேற்கூரை செட் போட்டு தெருநாய்களால் தொல்லை அவற்றை பிடித்து கொல்லுங்கள் என்று சொல்லும் இடங்களுக்கு சென்று அவற்றை பிடித்து வந்து உணவு அளித்து பராமரிக்க வேண்டும் என்பது தான் இந்த பிறவி பயன் என்று நான் கருதுகிறேன். என்னுடைய இப்பணிக்கு நாய்கள் மீது கருணை கொண்ட யாரும் ஆதரவு தரலாம்.இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Palladam , Palladam: Rajan, a temporary employee of Government Transport Corporation, is taking care of stray dogs in Palladam.
× RELATED வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு