எந்த பணியானாலும் முன்னோடியாக இருக்க வேண்டும்-பல்லடம் விழாவில் நீதிபதி பேச்சு

பல்லடம் : பல்லடம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில், சர்வதேச பெண்கள் தினம் பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியை சசிகலா தலைமை வகித்தார். மூத்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி மற்றும் வழக்கறிஞர்கள் சுதாகர், செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தானகிருஷ்ணசாமி பேசியதாவது: ஆண்களை விட பெண்கள் அனைத்து துறையிலும் அதிக அளவில் சாதித்து வருகின்றனர். இதற்கு பெண்களின் படிப்பறிவு காரணமல்ல. விடா முயற்சியும், கடின உழைப்புமே காரணம். நமக்கு எதிரிகள் யாரும் இல்லை. அவர்கள், நம் வீட்டில்தான் உள்ளனர். நம்மால் முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும். துப்புரவு பணி உள்பட எந்த பணியாக இருந்தாலும், அதில் நாம் தான் முன்னோடியாக இருக்க வேண்டும்.

சினிமா என்பது நம்மையும் அறியாமலேயே நம்மை பாதிக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை. அம்மா, தாத்தா, பாட்டியின் வாழ்க்கை வரலாற்றை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதில் கிடைக்கும் அனுபவங்களை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். நீதிபதி சித்ரா பேசுகையில்,``என்ன தான் நீதிபதியாக இருந்தாலும் எனக்கு கூட்டத்தின் முன் பேச முடியவில்லை. ஆனால், அதற்காக என் முயற்சியை நான் கைவிடவில்லை. யாரையும் எதிர்பார்க்காமல் வாழ பெண்கள் முயற்சித்து, நம்மால் சாதிக்க முடியும் என நம்பவேண்டும். அனைவரும் நேர்மையாக உழைத்து நல்ல நிலைக்கு வர வேண்டும்’’ என்றார்.

Related Stories: