×

ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்படுமா?

*கழிவுநீர் வாறுகால் வசதி அவசியம்

*மிகுந்த எதிர்பார்ப்பில் கிராம மக்கள்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி ஊராட்சி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆண்டிபட்டி ஒன்றியத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகள் உள்ளது. இதில் ஆண்டிபட்டி நகரை ஒட்டி பிச்சம்பட்டி ஊராட்சியில் அய்யனார்புரம், சென்னமநாயக்கன்பட்டி, மகாலிங்கபுரம், முல்லையம்பட்டி, வெங்கடாசலபுரம், பிச்சம்பட்டி, சமத்துவபுரம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இதில் பிச்சம்பட்டி கிராமத்தில் சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் ஏராளமானோர் கட்டிட கூலித் தொழில் செய்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த பிச்சம்பட்டி கிராமத்தில் மையப்பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பல ஆண்டுகளில் பல தெருக்களுடன் அமைந்துள்ள அமைந்துள்ள விரிவாக்கப் பகுதியில் தெருவிளக்கு, வடிகால், சிமெண்ட் சாலை, போன்ற வசதிகள் இல்லாமல் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தவித்து வருகின்றனர்.

இதில் பிச்சம்பட்டி எம்.கே.டி நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக கழிவுநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வீடுகளுக்கு அருகே பள்ளம் தோண்டி வைத்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் கழிவுநீர் வாறுகால் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. வீடுகளுக்கு அருகே பள்ளத்தில் கழிவுநீர்களை சேகரிப்பதால், சுகாதார பிரச்னைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

ஆண்டிபட்டி நகர் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளும் பிச்சம்பட்டி ஊராட்சிக்கு கட்டுப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆண்டிபட்டி நகரை ஒட்டியிருக்கும் சுப்புக்காலணி பகுதியில் இருந்து அய்யனார்புரம், சீனிவாசநகர், சமத்துவபுரம் செல்லும் பகுதி தற்போது வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. ரயில்வே டிராக் ஒட்டியுள்ள பகுதி, நகரில் உள்ள சுப்புக்காலணி, சீனிவாசநகர்
நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஓரளவு இந்த பிச்சம்பட்டி ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதிகளில் தற்போது 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர்.

இந்த பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாதால் அப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக தெருவிளக்கு, சாலை வசதி போன்றவைகள் இல்லாததால் அப்பகுதியில் வாழும் மக்கள் பெரும் அவதிகுள்ளாகியுள்ளனர். தெருவிளக்கு இல்லாததால், அந்தப்பகுதியில் திருட்டு போன்ற சமுக விரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும், சாலை வசதிகள் இல்லாததால் மழைக்காலங்களில் அந்தப்பகுதியில் நடந்து செல்வதற்கு சிரமமாக உள்ளதாகவும் அப்பகுதிகள் புகார் தெரிவிக்கின்றனர். சாலை வசதி இல்லாததால் தற்போது சேறும், சகதியுமாக உள்ளது. அவசர நேரத்தில் ஆட்டோ கூட வர முடியாத நிலை உள்ளது. நடந்து செல்வதற்கும், டூவீலரில் செல்வதற்கு கடும் போராட்டமாக உள்ளது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

அய்யனார்புரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழிலை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். தெருவிளக்கு, கழிவுநீர் வாறுகால், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள தெருவிளக்குகள் அனைத்தும் பழுதான நிலையில் உள்ளதால் இரவு நேரத்தில் கிராமம் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் விஷ பூச்சிகள் தொந்தரவும் அதிகமாக உள்ளதாக அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

மேலும் கழிவுநீர் வாறுகால் வசதி இல்லாததால் கிராமத்தில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதார கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாலை வசதி இல்லாததால் மழை காலங்களில் கிராம மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.இதுகுறித்து பிச்சம்பட்டியைச் சேர்ந்த மணிவாசகன் கூறுகையில், பிச்சம்பட்டி கிராமத்தில் உள்ள எம்கேடி நகர் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக கழிவுநீர் வாறுகால் வசதி இல்லாமல் உள்ளது.

ஊராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை. கழிவுநீரை வீட்டிற்கு அருகில் பள்ளத்தில் சேகரிப்பதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. இந்த கழிவுநீரை 3 மாதத்திற்கு ஒருமுறை நிறைந்து வருவதால் அதனை சுத்தம் செய்யவேண்டிய நிலை உள்ளது. இங்கு ஓரளவு வசதி படைத்தவர்கள் டிராக்டர் இயந்திரம் மூலமாக சுத்தம் செய்கின்றனர். மற்றவர்கள் அவர்களே சுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இதேபோல் சுப்புக்காலணி, அய்யனார்புரம், சீனிவாசநகர் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளிலும் அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.

இதனால் மழை காலத்தில் பெறும் சிரமப்படுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து பிச்சம்பட்டி ஊராட்சி நிர்வாத்திடம் கேட்டபோது, ‘‘எம்கேடி நகரில் வாறுகால் வசதி அமைப்பதற்கு தனிநபர்களிடம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இடம் கேட்டோம். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். மற்ற பகுதிகளில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.

Tags : Pichampatti ,Andipatti , Andipatti : To take appropriate steps to improve all basic facilities in the areas under Pichampatti Panchayat near Andipatti
× RELATED ஆண்டிபட்டி அருகே மண் திருடிய மர்ம...