பண்ணைக்கிணறு கிராமத்தில் கால்நடை மருத்துவ கல்லூரியின் புதிய கட்டிடங்கள் திறப்பு

*காணொலி வாயிலாக முதல்வர் துவக்கி வைத்தார்

உடுமலை : பண்ணைக்கிணறு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் புதிய கட்டிடங்களை சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஒன்றியம் பண்ணைக்கிணறு கிராமத்தில் புதிய கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இவை 42.89 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 2.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. புதிய கல்லூரியில் நிர்வாக கட்டிடம், வீட்டு எண்ணிக்கையிலான துறை சார்ந்த கல்விக்கூடங்கள், ஒரு கால்நடை தொழில்நுட்பக்கூடம், ஒரு பிரேத பரிசோதனை கூடம், மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள், கல்லூரி முதல்வர் குடியிருப்பு, 2 விடுதி காப்பாளர் குடியிருப்புகள், கால்நடை மருத்துவ வளாகம் மற்றும் கால்நடை பண்ணை வளாகம் ஆகியவை அமைந்துள்ளன.

 இக்கல்லூரியில் ஆண்டுக்கு 40 இளங்கலை கால்நடை மருத்துவ மாணவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். முதல் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கப்பட்டு படிப்பை பயில்கின்றனர். தற்போது மொத்தம் 119 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கால்நடை மருத்துவ படிப்பை பயில்கின்றனர். 15 துறைகள் கல்லூரியில் செயல்படுகின்றன. கால்நடை உடற்கூறுயியல், கால்நடை உடற்செயலியல் மற்றும் உயிர் வேதியியல் மற்றும் கால்நடை உற்பத்தி மேலாண்மை ஆகியவை இக்கல்லூரியில் செயல்படும் முதலாமாண்டு துறைகளாகும்.

2ம் ஆண்டில், விலங்கின மரபியல் மற்றும் இனப்பெருக்க துறை, கால்நடை உணவியல், கால்நடை நுண்ணுயிரியல் துறை மற்றும் கால்நடை நோய்க்குறியியல் போன்ற துறைகளில் மாணவர்கள் பயில்கின்றனர். மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டில், கால்நடை மருந்தியல் மற்றும் நச்சுயிரியல், கால்நடை பொது சுகாதாரம் மற்றும் தொற்று நோயியல், கால்நடை ஓட்டுண்ணியியல், கால்நடை பொருட்கள் தயாரிப்பு தொழில்நுட்பம், கால்நடை விரிவாக்க கல்வி துறை, கால்நடை அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்கவியல், கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை ஈனியல் துறைகள் அடங்கும். மேலும், கால்நடை மருத்துவ வளாகம் மற்றும் கால்நடை பண்ணை வளாகத்தில் மாணவர்களுக்கு செயல்முறை விளக்க பயிற்சி அளிக்கப்படுகிறது.

இக்கல்லூரியில் 38 எண்ணிகையிலான (27 ஆண்கள் மற்றும் 11 பெண்கள்) பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மற்றும் 5 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் 92 பணியாளர்களுக்கு கல்லூரியின் துறை சார்ந்த பணிகள் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் நவீன கருவிகள் கொண்ட ஆய்வகங்கள் தவிர புதிய கட்டிட வளாகத்தில் இளங்கலை மாணவர்களுக்கு 5 விரிவுரை அரங்குகள் உள்ளன. புதிய கட்டிட வளாகத்தில், நூலகம், கலையரங்கம், மாநாட்டு அரங்கம், கலந்துரையாடல் அறை, புகைப்படம் எடுக்கும் பிரிவு, குடிநீர் சுத்திகரிப்பு ஆலை, சுகாதார வசதிகள் உள்ளடக்கிய அனைத்து வசதிகளும், மாணவர்களுக்கும், பணியாளர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விடுதி வசதிகளை பொருத்தமட்டில் 210 மாணவர்கள் மற்றும் 206 மாணவிகள் தங்கும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக ஒரு தரைத்தளம் மற்றும் இரண்டு தளம் கொண்ட விடுதி கட்டிடம் நிறுவப்பட்டு உள்ளது. கால்நடை பண்ணை வளாகத்தை பொறுத்தவரை, கறவை மாட்டு பண்ணை, செம்மறி மற்றும் வெள்ளாடுகளுக்கான கொட்டகைகள், குதிரைகள் மற்றும் பன்றிகளுக்கான கட்டிடம், முட்டை மற்றும் கறிக்கோழிகளுக்கான கொட்டகைகள் அனைத்து கால்நடைகளுக்கும் தனித்தனியாக நிறுவப்பட்டுள்ளன.

 கால்நடை பண்ணை வளாகத்திற்கு மொத்தம் 10.43 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அதில் 6 ஏக்கர் நிலம் கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவன உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவரை மொத்தம் 23 பசுமாடுகள், 50 செம்மறி ஆடுகள் மற்றும் 50 வெள்ளாடுகள். 12 பன்றிகள், 2 குதிரைகள், 500 கறிக்கோழிகள் மற்றும் 500 முட்டை கோழிகள் முதற்கட்டமாக பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உடுமலைப்பேட்டை கால்நடை மருத்துவக் கல்லூரியின் கீழ் செயல்படும் கால்நடை மருத்துவ வளாகம் கரூர் பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் பெதப்பம்பட்டி கிராமத்தில் அமைத்துள்ளது. இதற்காக 205 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, பெரிய மற்றும் சிறிய கால்நடைகளுக்கான தனி மருத்துவ கூடம், அறுவை சிகிச்சை அரங்கு, ஈனியல் பிரிவுகள், புற நோயாளி பிரிவு, மாடுகளுக்கான அறுவை சிகிச்சை அரங்கம், குதிரை மற்றும் நாய்களுக்கான தனித்தனி அறுவை சிகிச்சை பிரிவு சிறிய கால்நடைகளுக்கு என்று பிரத்யேகப் பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் கால்நடைகளுக்கான கதிரியக்கப் பிரிவு, எண்டோஸ்கோபி, பிசியோதெரபி பிரிவு, பெரிய விலங்குகளுக்கான மீட்பு அறை மற்றும் தோல் நோய்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பண்ணையாளர்கள் கால்நடைகளை கொண்டு வரும்போது, பதிவு செய்வதற்கான வசதி, மருந்தகம், நோய் நுண்ணுயிரியல் சோதனைக் கூடம் மற்றும் உயிர் வேதியியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான தனித்தனி நோய் அறிதல் ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன. அது மட்டுமில்லாமல் கிராமங்களுக்கே சென்று பணிபுரிவதற்கு ஏதுவாக நடமாடும் கால்நடை சிகிச்சை பிரிவு உள்ளது.

இந்த கட்டிடங்களை சென்னையில் இருந்து நேற்று காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கால்நடை துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.பண்ணைக்கிணறு கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவில், கல்லூரி முதல்வர் குமாரவேல் தலைமை வகித்தார். துறை தலைவர் ஆ.குமரவேல் வரவேற்றார். கட்டிட பொறியாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி மகாராஜன், கால்நடைத்துறை ஓய்வு பெற்ற இயக்குநர் ராஜேந்திர, ஆர்கேஆர் குழும தலைவர் ராமசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆறுமுகம் நன்றி கூறினார்.

Related Stories: