×

மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் குடிநீர், கழிவறை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதி-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மயிலம் : மயிலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலம் பாலசுப்பிரமணியன் கோயிலுக்கு செல்லும் வழியில் சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு 20க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது சொத்துக்களை வாங்கவும், விற்கவும் தினந்ேதாறும் வந்து செல்கின்றனர். அதன்படி ஒரு நாளைக்கு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து பத்திரங்கள் பதிவு செய்தல், வில்லங்க சான்று பெறுதல், திருமண சான்றிதழ் பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக வருகின்றனர்.

இந்நிலையில் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அங்குள்ள கழிவறை சுத்தம் இல்லாமல், தண்ணீர் வசதி இல்லாமல் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் கழிவறை இருந்தும் பொதுமக்கள் கழிவறைக்கு செல்ல முடியாத அவலநிலை இருந்து வருகிறது.மேலும், அலுவலகத்துக்கு வருபவர்கள் நீண்ட தூரம் சென்று திறந்தவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள பல்வேறு நடவடிக்கைளை எடுத்து வரும் சூழ்நிலையில் இங்குள்ள அதிகாரிகளின் அலட்சியப்போக்கால் இத்தகைய சூழ்நிலை நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் சார்பதிவாளர் அலுவலகத்தில் போதிய இடம் இல்லாததால் சார்பதிவளார் பத்திரங்களை சரிபார்ப்பதற்கும், ஆன்லைனில் போட்டோ எடுப்பதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆவணங்களை பாதுகாப்பதிலும் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த கட்டிடம் பழமையான கட்டிடம் என்பதால் தளத்தில் சிமெண்ட் காரைகள் ஆங்காங்கே பெயர்ந்துள்ளது.

ஆகையால் எப்போது வேண்டுமானாலும் தளத்தின் சிமெண்ட் காரைகள் பொதுமக்கள் மீதும், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மீதும் விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும். கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Mylam Registrar , Peacock: Public demand to provide basic facilities including drinking water and toilets in Peacock Registrar's office.
× RELATED ‘மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கல…’ தாலி...