×

விஐடியில் சர்வதேச மகளிர் தின விழா பெண்களுக்கு உரிமை, மரியாதை கொடுக்க வேண்டும்-மாநில குற்றப் புலனாய்வுத்துறை தலைவர் பேச்சு

வேலூர் : வேலூர் விஐடியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது: திருவள்ளுவர் பெண்மையைப் பற்றி உயர்வாகத்தான் கூறியுள்ளார்.  உலகில் 193 நாடுகள் உள்ளன, இதில் உலகளவில் பெண்கள் 12 பேர் பிரதம மந்திரியாகவும், 17 பெண்கள் குடியரசு தலைவராக உள்ளனர். நாட்டில் நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும்.  அதேபோல் பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.

நாட்டில் பெண் குழந்தைகளின் கல்வி இன்னும் அதிகரிக்க வேண்டும், பெண், கல்வி பயில்வதில் நாம் பின்தங்கி உள்ளோம், குறிப்பாக பெண் குழந்தைகள் பள்ளி கல்வி படிக்கும்போதே நின்று விடுகிறார்கள். இது ஆபத்தானது. இதற்கு நிரந்தர நடவடிக்கை நாம் எடுக்க வேண்டும்.  நம் நாட்டில் நாடாளுமன்றத்தில் 14 சதவீதம் பெண்கள், சட்டசபையில் 8 சதவீதம் பெண்கள் தான் உள்ளனர்.  அதேபோல் இந்திய குடிமைப் பணியான ஐஏஎஸ் பணியில் 13 சதவிகிதம், ஐபிஎஸ் பணியில் 9 சதவிகிதம், ஐஎப்எஸ் பணியில் 8 சதவிகிதம் பெண்கள் தான் உள்ளனர். இந்த நிலை எதிர்வரும் காலங்களில் பன்மடங்காக உயர வேண்டும். அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளை மூலம் இதுவரை 7000க்கும் அதிகமான மாணவ, மாணவிகளின் கல்வி பயில்வதற்கு உதவி உள்ளோம்.  இந்த அறக்கட்டளை மூலம் உதவி பெற்றவர்களில் 66 சதவிகிதம் பெண்கள் தான். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மாநில குற்றப் புலனாய்வுத்துறை, காவல்துறையின் தலைவர் தேன்மொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், ‘பெண்களுக்கு சரியான உரிமையும், தகுந்த மரியாதையும் கொடுக்க வேண்டும். பெண்கள் எப்போதும் தங்களை சுற்றி விழிப்புடன் இருக்க வேண்டும். பெண்கள் தியாகத்துக்கு மட்டும் பிறக்கவில்லை வாழ்க்கையை வாழ்வதற்கும் தான்’ என்றார்.
தொடர்ந்து விஐடி துணைத்தலைவர் ஜி.வி. செல்வம் பேசியதாவது:

மனிதனின் வாழ்க்கை பெண்கள் இல்லாமல் முழுமையடைவதில்லை. பெண்கள், ஆண்களுக்கு தாயாக, சகோதரியாக, மனைவியாக மற்றும் குழந்தையாக உள்ளனர். குறிப்பாக பெண் குழந்தைகள் வேண்டும். காரணம் வயதான காலத்தில் பெண் குழந்தைகள் தான் பெற்றோர்களை அன்புடன் கவனித்துக் கொள்வார்கள். அதேபோல் பெண்களிடம் நம் கற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்களில் முக்கியமானவை சேவை மற்றும் தியாகம்.

விஐடியில் பெண்களுக்கு தகுந்த உரிமை மற்றும் மரியாதை கொடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாநில குற்றபுலனாய்வு துறை, காவல் துறை தலைவர் தேன்மொழி மற்றும் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பரிசுகளை வழங்கினர். இந்த விழாவில் கவுரவ விருந்தினர் சிப்லா நிறுவனத்தின் உதவி இயக்குனர் மீனாட்சி சின்கா, விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : International Women's Day ,VIT ,State Crime Investigation Department , Vellore: International Women's Day was celebrated at Vellore VIT. VIT Chancellor G. Viswanathan presided over the function and said:
× RELATED பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து வகை...