கோவை: கார் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரை சென்னையில் இருந்து கோவை அழைத்து சென்று என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. கோவையில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 23-ம் தேதி கார் வெடிப்புச் சம்பவம் அரங்கேறியது. இதில், காரை ஓட்டி வந்த அதேப் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் (25) என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர வீட்டிலிருந்து நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான ரசாயனங்கள், ஐஎஸ் தீவிரவாத அமைப்பு ஆதரவு வாசகங்கள் அடங்கிய தாள்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவையில் விசாரணை நடைபெற்று வருகிறது. சென்னை சிறையில் இருந்து 5 பேரையும் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் அழைத்துவரப்பட்டு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.