ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு மனிதாபிமானம் உள்ளதா?- வி.சி.க தலைவர் திருமாவளவன் கேள்வி

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு மனிதாபிமானம் என்பது கேள்விக்குறியாக உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை, மீண்டும் திருப்பி அனுப்பி இரண்டாவது முறையாக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால், பல்வேறு தற்கொலைகள் நிகழ்ந்ததோடு பலர் தங்களது பணத்தையும் இழந்துள்ளனர். இதுவரை 44 பேர் பேர் தற்கொலை செய்துள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவசர சட்டத்தை நிரந்தரமாக்கும் சட்ட மசோதா, கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதன்பிறகு இந்த சட்ட மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பியது. ஆனால், இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை. இந்த மசோதா தொடர்பாக, ஆளுநர் தமிழக அரசிடம் சில விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநர் மாளிகைக்கு நேரில் சென்று விளக்கமளித்தார்.

இருப்பினும், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் ஒப்புதலுக்காக காத்திருந்தது.  இந்தநிலையில், ஆன்லைன் ரம்மி மசோதாவை மீண்டும் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு 4 மாதங்கள் கடந்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதவை திருப்பி அனுப்பிய ஆளுநருக்கு மனிதாபிமானம் என்பது கேள்விக்குறியாக உள்ளது என வி.சி.க தலைவர் திருமாவளவன் சாடியுள்ளார்.

சட்டத்தின் அடிப்படையில் முடிவெடுக்கா விட்டாலும் மனிதாபிமான அடிப்படையில் கூட முடிவெடுத் திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை  ஒன்றிய அரசு உடனே திரும்பி பெற வேண்டும் என்றும் வி.சி.க தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். அதை தொடர்ந்து பேட்டியளித்த அவர் திமுக கூட்டணியில் வலிமையாக, நல்ல இணக்கத்துடன் இருக்கிறோம் என்றும் தெரிவித்தார். அகில இந்திய அளவில் இந்த கூட்டணியை கொண்டு செல்ல இருப்பதே அடுத்தகட்ட பணி என்றும் அவர் கூறினார்.

Related Stories: