எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த இயக்கத்தை அழித்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியே கட்சியை விட்டு வெளியேறு: சேலம் அருகே இபிஎஸ்-க்கு எதிராக போஸ்டர்

சேலம்: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தோல்விக்கு பொறுப்பேற்று அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்ய கோரி எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அதிமுகவானது எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டாக பிரிந்துள்ளது.

முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் பெரும்பாலானோரை தனது ஆதரவாளர்களாக கொண்ட எடப்பாடி பழனிசாமி அதிமுகவை தன் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிட்டார்.

இதில் அவர் வசிக்கக்கூடிய சொக்காய் தோட்டம் என்ற வாக்குசாவடிலேயே, காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை விட 271 வாக்குகள் குறைவாக பெற்றிருந்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக படு தோல்வியை சந்தித்தது. அதிமுகவை விட காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் சுமார் 66ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று அமோக வெற்றி பெற்றார்.

அதிமுகவின் இந்த படுதோல்வி தொண்டர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமிக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் படுதோல்வி கடும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், சாரதா கல்லூரி சாலை, ஓமலூர் தேசிய நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அதிமுகவின் தொடர் தோல்விக்கு காரணமான எடப்பாடி பழனிசாமியே கட்சியை விட்டு வெளியேறு, எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த இயக்கத்தை அழித்து கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியே கட்சியை விட்டு வெளியேறு, அதிமுக தொண்டர்களை மதிக்காத எடப்பாடி பழனிசாமியே கட்சியை விட்டு வெளியேறு உள்ளிட்ட வாசகங்கள் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: