எண்ணூரில் பரபரப்பு கொசஸ்தலை ஆற்றில் மஞ்சள் நிறமாக மாறிய தண்ணீர்: பீதியில் கரைக்கு திரும்பிய மீனவர்கள்

திருவொற்றியூர்: எண்ணூரில் கொசஸ்தலை ஆறும் கடலும் கலக்கும் முகத்துவார பகுதியில் எண்ணூரை சுற்றி உள்ள எண்ணூர் குப்பம், சின்ன குப்பம், பெரிய குப்பம், காட்டுகுப்பம், சிவன் படை வீதி குப்பம் உள்ளிட்ட 8 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் ஆற்றில் பைபர் படகுகள் மூலம் மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை திடீரென எண்ணூர் கொசஸ்தலை ஆற்றின் ஒரு பகுதி மஞ்சள் நிறமாக மாறியது. போக போக அது ஆறு முழுவதும் பரவி  மஞ்சள் நிறமாக காட்சியளித்தது. இதை பார்த்த ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் பீதி அடைந்து படகுகளை கரைக்கு திருப்பினர்.  இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு மீன்வளத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து ஆற்று நீர் மஞ்சளாக மாறியதை படம் பிடித்து சென்றனர். மேலும் அந்த தண்ணீரை பாட்டில்களில் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கூறுகையில், எண்ணூர் கொசஸ்தலை ஆற்று பகுதியை சுற்றி ரசாயன கம்பெனிகள், ரசாயன கலவையை ஆற்றில் விடுவதால் மீன்கள் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன் மீன்கள் செத்து மடிகிறது. எனவே சுத்திகரிக்காமல் இதுபோன்ற கழிவுகளை ஆற்றில் விடும் தொழிற்சாலை மீது மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். எண்ணூர் கொசஸ்தலை ஆறு மஞ்சள் நிறமாக மாறியது அப்பகுதி மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: