பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவில் ரூ.17 லட்சத்தில் கடற்பாசி பூங்கா: மேயர் பிரியா ஆய்வு

சென்னை: பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவில், ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் கடற்பாசி பூங்கா அமைக்கும் பணிகளை மேயர் பிரியா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி, பூங்காத்துறையின் சார்பில் மாநகரில் சுற்றுச்சூழலை பேணி காக்கவும், பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காகவும், 786 பூங்காக்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் ஒப்பந்த முறையிலும், தத்தெடுப்பு முறையிலும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள 584 பூங்காக்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன 2022-23ம் ஆண்டிற்கான சட்டமன்ற மானியக் கோரிக்கையில் அமைச்சர் கே.என்.நேரு, ‘நகர்ப்புறங்களை பசுமையாக்கி, இயற்கைச் சூழலை மேம்படுத்த சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய பூங்காக்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பூங்காக்கள் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும்’ என அறிவித்தார்.

இதை தொடர்ந்து, சென்னை மாநகராட்சி திரு.வி.க நகர் மண்டலம் பெரம்பூர் முரசொலி மாறன் பூங்காவில் புதிதாக 9 ஆயிரம் சதுர அடியில் ரூ.17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள கடற்பாசி  பூங்கா பணிகளை மேயர் பிரியா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், பூங்காவில் மழைநீர் சேகரிப்பு வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுவது மற்றும் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ஆய்வின் போது திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, மண்டல அலுவலர் எஸ்.முருகன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: