×

அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் 4 வாரத்தில் பதிலளிக்க காவல்துறைக்கு நோட்டீஸ்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சென்னை:  விழுப்புரத்தில் அமைந்துள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்த பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆசிரமத்தை நடத்தி வந்தவர்களாலே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே இது தொடர்பாக பேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு இந்த விவகாரம் தொடர்பாக பதிலளிக்க தெரிவித்திருந்தது. இந்நிலையில், விழுப்புரம் அன்பு ஜோதி இல்லம் தொடர்பான விவகாரத்தில் நாளிதழ்களில் வந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் நான்கு வாரத்தில் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவான பதில் அளிக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்கியிருந்தால் அதுகுறித்த விவரங்களையும் வழங்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையினர் தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட ஆசிரமத்திற்கு நேரில் சென்று விரிவான விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நேர்மையான விசாரணையாக அது நடைபெற வேண்டும் எனவும் நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.




Tags : Anbu ,Jyoti Ashram ,National Human Rights Commission , Anbu Jyoti Ashram issue: Notice to police to respond in 4 weeks: National Human Rights Commission orders
× RELATED நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை