×

பாஜவுடன் அதிமுக கூட்டணி தொடர்கிறது: ஜெயக்குமார் திடீர் பல்டி

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில், அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் முடிந்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வர உள்ளதால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதிமுக சாதனைகளை பட்டி தொட்டிகள் எல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து பேசவில்லை. எடப்பாடி உருவ படத்தை பாஜவினர் எரித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற செயல்களை பாஜ, ஊக்கப்படுத்தாமல்  அவர்களை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

பாஜ மோதல் குறித்தும் இன்று (நேற்று) நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கவில்லை. அவர்களுடன் எங்களுக்கு எந்த மோதலும் இல்லை. யார் மோதல் என்று சொன்னது. ஏதோ சிலர் பாஜ ஐடி விங்கில் இருந்து பக்குப்படாத கருத்துக்களை சொன்னார்கள். அந்த கருத்துக்கு நாங்களும் பதில் கருத்தை சொல்லி விட்டோம். அதனால் அதிமுக - பாஜ கூட்டணி தொடருகிறது. அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயக கூட்டணி. தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் கூட்டணி. இது தொடரும். அண்ணாமலை மீண்டும் அதிமுக பற்றி கருத்து சொன்னதாகவும், ஜெயலலிதாவைவிட எனது தாயார் 100 மடங்கும், எனது மனைவி 1000 மடங்கும் பவர்புல் லேடி என்று கூறியதாக கேட்கிறீர்கள். அது அவருடைய தனிப்பட்ட கருத்து. யாரும் ஜெயலலிதா போல ஆக முடியாது. அண்ணாமலையின் தாயை பற்றியும், மனைவியை பற்றியும் உயர்த்தி பேசுவது அவருடைய தனிப்பட்ட கருத்து. அதற்குள் போய் நான் கருத்து சொல்ல முடியாது. நாங்கள் எந்த சர்ச்சையான கருத்தும் சொல்லவில்லை. அப்படி இருக்கும்போது, எப்படி மாவட்ட செயலாளர் கூட்டத்தில் விவாதிக்க முடியும்.ஓபிஎஸ் நடத்துவது கட்சி அல்ல, அவர் ஒரு கடை நடத்திக் கொண்டு இருக்கிறார். அப்படி இருக்கும்போது அவர் மற்றவர்களை எப்படி நீக்க முடியும். 99 சதவீதம் நிர்வாகிகள் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக் கொண்டுள்ளார்.


Tags : AIADMK Alliance ,BJP ,Jayakumar ,Sudden Baldi , AIADMK Alliance With BJP Continues: Jayakumar Sudden Baldi
× RELATED தமிழர்களை இழிவுபடுத்தி பாஜ வெளியிட்ட...