×

தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: அமைச்சர் சி.வெ.கணேசன் அறிவிப்பு

சென்னை: சென்னை, தேனாம்பேட்டை, தொழிலாளர் நலவாரிய கருத்தரங்கு கூடத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியத்தின் முதலாவது வாரிய கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேசியதாவது: தமிழ்நாட்டிலேயே விருதுநகர் மாவட்டத்தில் தான் அதிகளவில் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் பல லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  பணிபுரியும்போது எதிர்பாரா விதமாக ஏற்படும் விபத்தில் மரணம் அடைந்தால் அவர்களது குடும்பத்தினருக்கு உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு செலவினம் வழங்கப்பட்டு வருகின்றன.  

தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியத்தில் கடந்த மாதம் 28ம் தேதி வரை 61,141 தொழிலாளர்கள் பதிவு பெற்றுள்ளனர். 4,724 தொழிலாளர்களுக்கு ரூ.2,19,38,950 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களால் தமிழ்நாட்டில் தீப்பெட்டி உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நடவடிக்கை எடுக்க தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதனை ஏற்று தமிழகத்தில் சட்டவிரோதமாக விற்கப்படும் வெளிநாட்டு சிகரெட் லைட்டர்கள் மீது பொட்டல பொருள்கள் விதிகளின் கீழ் சிறப்பு குழுக்கள் அமைத்து பறிமுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.. இந்த கூட்டத்தில், பதிவு பெற்ற தொழிலாளர்களின் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு ஆண்டிற்கு ரூ.1,000 வழங்கும் புதிய கல்வி நல உதவி திட்டம், இயற்கை மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்ட நல உதவித் தொகையை ரூ.20,000ல் இருந்து ரூ.30,000மாக உயர்த்துவது, விபத்தில் மரணமடைந்தால் நல உதவித்தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.1.25 லட்சமாக உயர்த்தியதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது.



Tags : Tamil Nadu ,Minister ,C.V.Ganesan , Action to confiscate foreign cigarette lighters sold illegally in Tamil Nadu: Minister C.V.Ganesan announced
× RELATED தென்காசியில் திமுக வேட்பாளர் ராணி...