×

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தெலங்கானா முதல்வர் மகள் நாளை ஆஜராக அவகாசம்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா நாளை ஆஜராவதற்கு அமலாக்கத்துறை அவகாசம் வழங்கி உள்ளது.  டெல்லியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்ட போது  தனியாருக்கு சலுகை வழங்கியதாக கூறி சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளது. இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சவுத் குரூப் என்ற நிறுவனத்தை சேர்ந்த தொழிலதிபர் அருண் ராமச்சந்திரன்,  ஆம் ஆத்மி கட்சி தலைவர்களுக்காக அக்கட்சியை சேர்ந்த விஜய் நாயர் என்பவரிடம்  ₹100 கோடி லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சவுத் குரூப்பில்  தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவின் மகளும், எம்எல்சி.யுமான கவிதா,  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்பி மகுண்ட சீனிவாசலு ரெட்டி, தொழிலதிபர்  சரத்ரெட்டி உள்பட பல்வேறு பிரபலங்கள் அங்கம் வகிப்பது தெரியவந்தது.

இந்த வழக்கில்  கவிதாவிடம் விசாரணை நடத்த  சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. கவிதா நேற்று டெல்லியில் உள்ள அமலாக்க துறை  அலுவலகத்தில் ஆஜராகவில்லை.  அவர் அவகாசம்  கேட்டிருந்தார். இதையடுத்து நாளை ஆஜர் ஆவதற்கு அமலாக்கத்துறை அவகாசம் அளித்து உள்ளது. இதை டிவிட்டரில் கவிதா பதிவிட்டுள்ளார்.  கவிதா கூறுகையில், ‘9 மாநிலங்களில் பின்கதவு வழியாக நுழைந்து ஆட்சி அமைத்ததை பார்த்தோம். தெலங்கானாவில் அதைச் செய்ய முடியவில்லை. அதனால்தான் இப்போது அமலாக்கத்துறையை பயன்படுத்துகிறார்கள். ஆனால் நாங்கள் பயப்படவில்லை.  நாங்கள் அமலாக்க துறை விசாரணையை எதிர்கொள்வோம். எங்களைப் போன்றவர்களை சித்திரவதை செய்வதன் மூலம் உங்களுக்கு என்ன கிடைக்கும்?. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஆதரித்து டெல்லியில் இன்று நான் உண்ணாவிரத போராட்டம் நடத்த போகிறேன். இதில் 18 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள்’ என்றார்.

* மோடி அனுப்பும் சம்மன் தெலங்கானா முதல்வர் மகனும், கவிதாவின் சகோதரரும், அமைச்சருமான கே.டி. ராமராவ் கூறியதாவது: பா.ஜ நேர்மையற்ற ஆட்சி நடத்துகிறது. எனவே நேர்மையற்ற முறையில் விசாரணை அமைப்புகள் மாறிவிட்டது. அதனால் டெல்லி மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பும் சம்மன் அனைத்தும் மோடி அனுப்பும் சம்மன் ஆகும். தொழிலதிபர் கவுதம் அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் தொடர்பு உள்ளது. ₹13 லட்சம் கோடி பணத்தை எல்ஐசி, எஸ்பிஐ இழந்தாலும் பிரதமர் மோடியும்,  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வாய் திறக்கவில்லை. தெலங்கானா காவல்துறையின்  விசாரணையைத் தவிர்க்க முயன்ற பாஜ  தலைவர் பி எல் சந்தோஷ் போல் இல்லாமல் கவிதா அமலாக்கத்துறை முன் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பார். அதே சமயம் பாஜ  தலைவர்கள் யாருக்கும் ஒன்றிய விசாரணை அமைப்புகள் இதுவரை சம்மன் அனுப்பவில்லையே ஏன்?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.



Tags : Telangana ,Chief Minister ,Delhi , Telangana Chief Minister's daughter to appear tomorrow for Delhi liquor policy abuse
× RELATED டெல்லி மதுபான கொள்கை முறைகேடு...