×

செயற்கை மணல் உற்பத்திக்கான புதிய கொள்கை: முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் செயற்கை மணல் (எம் சேண்ட்) உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை வெளியிட்டார். தமிழகத்தில் செயற்கை மணல் (எம் சேண்ட்) உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. நேற்றைய தேதியிலிருந்து இந்தக் கொள்கை நடைமுறைக்கு வந்தது.
செயற்கை மணல் (எம் சேண்ட்) உற்பத்தியை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய கொள்கையின் முக்கிய பொருண்மைகள், அதிகமான அளவு மணல் எடுத்தல் மற்றும் இயற்கைத் வளங்களின் குறைபாடு ஆகியவற்றால் ஆற்றுமணலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே ஆற்று மணலுக்கு மாற்றாக செயற்கை மணல்/அரவை மணல் உற்பத்தியை அதிகரிக்க கருதுகிறது. மேலும், செயற்கை மணல் / அரவை மணல் குவாரி செயல்பாட்டின் போது பயன்பாட்டிற்கு உதவாத கற்களிலிருந்தும் சிறிய அளவிலான கிரானைட் கற்களிலிருந்தும் தயாரிக்கப்படுவதால் குவாரிகளில் ஏற்படும் கழிவுகளின் அளவினை குறைப்பதற்கு பயன்படுகிறது. கிரானைட் மற்றும் சாதாரணக்கல் குவாரிகளில் கிடைக்கும் சிறிய அளவிலான கற்கள் செயற்கை மணல் / அரவை மணல் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.

மாநிலத்தில் குவாரி கழிவுகளே இல்லாத நிலையினை உருவாக்குவதே இக்கொள்கையின் குறிக்கோளாகும். உற்பத்திக்கான தரம் முறையாக பயன்படும்பொழுது செயற்கை மணல் / அரவை மணல் அதிக நெகிழ்வுத்தன்மையும், உறுதித்தன்மை, எடை மற்றும் குறைந்த ஊடுருவக்கூடிய தன்மையும் கொண்டுள்ளது. இந்த நன்மைகள் காரணமாக செயற்கை மணல்/ அரவை மணல் தற்போது கட்டுமானத் துறையில் பெரிய அளவில் பயன் படுத்தப்படுகிறது. இக்கொள்கையின் சிறப்பம்சங்கள்: ஆற்று மணலைப் பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஆற்றின் சுற்றுச்சூழலுக்கு சேதம் ஏற்படுவதைத் தடுத்தல், இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரத்தையொட்டி அதிக வலிமை மற்றும் செலவு குறைந்த, ஆற்று மணலுக்கு மாற்று கட்டுமானப் பொருளாக, தரமான செயற்கை மணல்/ அரவை மணலின் பயன்பாட்டை ஊக்குவித்தல், தமிழ்நாட்டில் உள்ள செயற்கை மணல் / அரவை மணல் உற்பத்தி தொழிற்சாலைகள் தொடர்புடைய சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளை முறையாக பின்பற்றச் செய்தல், செயற்கை மணல் / அரவை மணல் உற்பத்தி தொழிற்சாலைகளின் ஒப்புதலுக்கான நடைமுறையை முறைப்படுத்துதல், கல் குவாரிகளை மட்டுமே நம்பியிருக்கும் மண் அரைக்கும்/உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை பெறுவதற்கு வழி வகை செய்தல்; இக்கொள்கையின்படி செயற்கை மணல் / அரவை மணல் உற்பத்தி செய்வதற்காக தனிப்பட்ட குவாரி குத்தகைகள் எதுவும் வழங்கப்பட மாட்டாது. இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் ஜெயகாந்தன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Chief Minister ,M.K. ,Stalin , New Policy for Artificial Sand Production: Chief Minister M.K. Published by Stalin
× RELATED மோடியின் அப்பட்டமான சதித்திட்டத்தை...