சென்னை: வரும் 31ம் தேதி முதல், தமிழ்நாடு நெடுஞ்சாலைகளில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் உள்ள 5 சுங்கச் சாவடிகளை மூட வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ள நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தமிழ்நாடு நெடுஞ்சாலைகளில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் மார்ச் 31ம் தேதி முதல் சுங்கக் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாட்டில் உள்ள 566 சுங்கச்சாவடிகளில் 10 சதவீதம் 55 சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில் உள்ளது. இவற்றில் ஆண்டுதோறும் மார்ச் 31ம் தேதி முதல் 29 சுங்கச் சாவடிகளிலும் மற்றவற்றில் செப்டம்பர் 1ம் தேதி முதல் சுங்க கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம். அதன்படி, சென்னை புறநகர் சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வரும் 31ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் 29 சுங்கச்சாவடிகளில் இந்த மாற்றியமைக்கப்பட்டுள்ள கட்டணங்களைச் செலுத்த வேண்டும்.
சென்னைக்கு அருகில் உள்ள சுங்கச்சாவடிகளில் கார்கள் ஒருவழிப் பயணத்திற்கு ₹5 முதல் ₹15 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். சென்னையில் இருந்து மதுரை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களுக்குச் செல்ல, கார்கள் ஏற்கனவே ₹700க்கு மேல் கட்டணம் செலுத்தி வருகின்றன. இப்போது, அத்தகைய பயணங்களுக்கு ₹50 முதல் ₹100 வரை கூடுதலாகச் செலவிட வேண்டும். லாரிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் ₹20 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஏற்கனவே டீசல், பெட்ரோல் பொருட்களின் விரை உயர்வால் அவதிப்பட்டு வரும் லாரி உரிமையாளர்களுக்கு இந்த 10 சதவீத கட்டணம் உயர்வு அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. சரக்கு போக்குவரத்தில் லாரிகள் முக்கிய பங்கு வகித்து வருவதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடும்.
இதுகுறித்து தமிழ்நாடு சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ கூறுகையில்: வருடாந்திரம் சுங்கக்கட்டணம் உயர்த்துவது வழக்கமாக இருந்தாலும் சுங்கச்சாவடிகளில் என்ன மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். சுங்கச்சாவடிகளில் கழிவறை இல்லை, போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறது. மேலும் சாலையில் மின்விளக்குகள் இல்லை ஆனால் கட்டணம் வசூலிக்கப்படுவதில் என்ன பயன் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.* சுங்கச்சாவடி அருகில் போராட்டம் தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறுகையில்: தமிழ்நாட்டில் சுங்கச்சாவடிகளில் ஒப்பந்ததாரர்கள் இல்லாமல் பணம் வசூலிக்கும் முகவர்கள் இருந்து பணத்தை வசூலித்து வருகின்றனர். இதில் மாநில அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும். மேலும் மார்ச் 31ம் தேதி முதல் இந்த சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தால் ஏப்ரல் 1ம் தேதி அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் இணைந்து மதுரவாயல் சுங்கச்சாவடி அருகில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.