சத்தியமங்கலம்: புஞ்சை புளியம்பட்டி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று, கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. கடந்த 7ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி தொடர்ந்து நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்றது. நேற்று இரவு மூன்றாம் கால யாக பூஜையில் மகாபூர்ணாஹுதி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாக பூஜையில் மகா தீபாராதனை நடைபெற்று, மேளதாளங்கள் முழங்க கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது. பின்னர் வேத மந்திரங்கள் முழங்க விமான கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பரிவார மூல மூர்த்திகளுக்கும், தண்டாயுதபாணி சுவாமிக்கு புனிதநீர் ஊற்றி மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து தண்டாயுதபாணி சுவாமிக்கு அலங்கார பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.