×

மாசி பெருந்திருவிழாவையொட்டி நத்தம் மாரியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம்: திரளான பக்தர்கள் தரிசனம்

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவையொட்டி அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி நகர்வலம் வந்தார். அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயில் தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் நடக்கும் விழாக்களில் முக்கியமானது மாசி பெருந்திருவிழா. இத்திருவிழா இந்த ஆண்டு கடந்த பிப்.20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் பக்தர்கள் காப்பு கட்டி 15 நாள் விரதம் தொடங்கினர். பிப்.24, பிப்.28, மார்ச் 3ம் தேதி இரவுகளில் அம்மன் சர்வ அலங்காரத்தில் மயில், அன்னம், சிம்மம் போன்ற வாகனங்களில் எழுந்தருளி மின் ரதத்தில் நகர்வலம் வந்து அருள் பாலித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி விழா கடந்த 7ம் தேதி நடந்தது. அன்று காலை அன்று காலை  கோயில் முன் கழுகு மரம் ஊன்று நிகழ்ச்சியை தொடர்ந்து கழுகு மரம் ஏறப்பட்டது. இதன்பின் பக்தர்கள் பூக்குழி இறங்கினர். விழா நாட்களில் பக்தர்கள் மாவிளக்கு, கரும்பு தொட்டில், அரண்மனை பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை அம்மன் மஞ்சள் நீராட்டுதல் நடந்தது. இரவு மாரியம்மன் சர்வ அலங்காரத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளி அம்மன் குளத்திலிருந்து புறப்பட்டு நகர்வலம் வந்து இன்று காலை கோயிலை அடைந்தார். பக்தர்கள் திரண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆலோசனையின் பேரில்  நத்தம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, சப்  இன்ஸ்பெக்டர்கள் என 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை தமிழக இந்து சமய அறநிைலைய துறை கோயில் நிர்வாக அலுவலர் சூரியன், பூசாரி வகையறாக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். பேரூராட்சி சார்பில் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் செயல் அலுவலர் சரவணக்குமார் மேற்பார்வையில் துப்புரவு ஆய்வாளர் செல்வி சித்ரா மேரி உள்ளிட்ட பணியாளர்கள், ஊழியர்கள் குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதார வசதிகளை செய்திருந்தனர்.


Tags : Natham ,Mariamman Bupallakh ,Masi Planti Festival , Natham Mariyamman Bhupallak Nagarvalak on the occasion of Masi Perundruvizha: A large number of devotees have a darshan.
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா