×

கடந்த ஆட்சியாளர்களால் கடனில் மூழ்கிய மின்சார வாரியத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் ஒன்றிணைத்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிவரும் கருத்துக்கள் குறித்து தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று (09.03.2023) சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் (மின் தொடரமைப்பு கழகம்) ரா.மணிவண்ணன், இயக்குநர் (பகிர்மானம்) மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

பின்னர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில்; தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2 கோடியே 67 இலட்சம் பேர்களின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கக்கூடிய பணிகள் தொடங்கப்பட்டு மிகச் சிறப்பாக பணிகள் நடந்து முடிந்திருக்கின்றன. குறிப்பாக, 67,000 பேர் மட்டுமே மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்காமல் நிலுவையில் உள்ளன.  இந்த சூழலில் இரண்டு தினங்களாக ஒரு குடியிருப்பில் 2க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அதை ஒரு மின் இணைப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று திருவெறும்பூரில் ஒரு உதவி பொறியாளர் அறிக்கை அனுப்பி, அது ஒரு செய்தியாக வெளியில் பரவி ஒரு சூழல் உருவாகியது.  

உடனடியாக, மின்சார வாரியத்தின் மூலமாக மதிப்பிற்குரிய தலைவர் மற்றும் இயக்குநர்/பகிர்மானம் அவர்கள் ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட அதிகாரியின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது.  எனவே, பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சியைச் சார்ந்திருக்கின்ற ஊடக நண்பர்கள் இது போன்ற செய்திகள் ஏதேனும் வந்தால் என்னிடமோ அல்லது மதிப்பிற்குரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மற்றும் இயக்குநர்/பகிர்மானம் அவர்களிடம் கேட்டு அதைத் தெளிவுப் படுத்தி செய்தியாக வெளியிட்டால் நன்றாக இருக்கும். ஒரு செய்தி வந்தால் அது பொதுமக்களிடையே ஒரு பதட்டத்தை ஏற்படுத்தும்  சூழலாக மாறிவிடுகிறது.

இது போன்ற சுற்றறிக்கை தலைமையிடத்தில் இருந்து அனுப்படவில்லை. அந்த அதிகாரி தானாகவே அந்த அறிக்கையை அறிவித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  எனவே, தமிழ்நாடு மின்சார வாரியத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே, பெறப்பட்டுள்ள மின் இணைப்புகளில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஒருவர் எத்தனை மின் இணைப்பு பெற்றிருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் என்பது வழங்கப்படும். ஏற்கனவே, மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடங்கியபோது முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் அடிப்படையில் என்ன தகவல்களை சொன்னமோ அதே நடைமுறை தான் மின்சார வாரியம் பின்பற்றி வருகிறது.

உங்கள் கையில் ஒரு அரசாணையின் நகல் கொடுத்திருக்கிறோம். 2021 பிப்ரவரி 26ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 2021 பிப்ரவரி 25ம் தேதி ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் வெளியிடப்பட்ட அந்த அரசாணையில் மிகத் தெளிவாக பத்தி 3ஐ படித்து பாருங்கள் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டப் பட்டிருக்கிறது. அதாவது, டெல்டா பகுதிகளில் 12 மணி நேரமும் மற்ற பகுதிகளில் 9 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது என்பது கடந்த அதிமுக ஆட்சி அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 25ம் தேதி வெளியிடப்பட்ட அந்த அரசாணை 26ம் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. அதுவும் என்னைக்கு நடைமுறைப் படுத்தப்படும் என்றும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.  

அந்த அரசாணையின் பின் பக்கத்தில் பாருங்கள் 01.04.2021 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  26ம் தேதியே தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டது.  தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற காலக்கட்டத்தில் தேர்தலை மனதிலே வைத்து தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முதல் நாள் ஒரு அரசாணையை வெளியிட்டு அந்த அரசாணையில் கடந்த அதிமுக ஆட்சியில் என்ன வழங்கப்பட்டிருக்கிறது என்பதும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டெல்டா பகுதியில் 12 மணி நேரமும் மற்ற பகுதிகளில் 9 மணி நேரமும் மட்டும் தான் கடந்த அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது என்பதை அவர்களே உறுதி செய்திருக்கிறார்கள்.

ஆட்சிக்கு வந்த ஒன்றறை ஆண்டில் 1,50,000 விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்பை முதலமைச்சர் திருக்கரங்களால் வழங்கினார். அத்தனை விவசாயிகளும் முதலமைச்சர் அவர்களை மனதாறப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய காலக் கட்டத்தைப் பொறுத்தவரைக்கும் நம்முடையை மின் தேவை என்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கடந்த 2022ல் ஏப்ரல் மாதத்தில் 17,563 மெகாவாட் உட்சபட்சமாக பதிவாகி இருந்தது. அதேபோல், இந்தாண்டு 04.03.2023 ல் 17,584 மெகாவாட் அளவிற்கு பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் மார்ச்சில் 17,196 மெகாவாட் இருந்தது இந்தாண்டு 18,100 மெகாவாட்டாக அதிகரிக்கும் என்றும் கடந்த ஏப்ரலில் 17,563 என்பது  இந்தாண்டு 18,500 மெகாவாட்டாக அதிகரிக்கும்.

அதேபோல, கடந்தாண்டு மே மாதம் 16,750 மெகாவாட்டாக பதிவாகியுள்ளது. இந்தாண்டு 18,000 மெகாவாட்டாக தேவை அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த கூடுதல் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு வரலாற்றில் இல்லாத அளவில் இந்த மூன்று மாதங்களுக்கு மட்டும் தேவையான 1,562 மெகாவாட் மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு 8 ரூபாய் 50 பைசா விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் எக்சேஞ்சில் மின்சாரம் கொள்முதல் செய்யும்போது 12 முதல் 20 ரூபாய் வரை அதிக விலையில் வாங்கப்பட்டுள்ளது. அதைக் குறைக்ககூடிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலமாக, 1,312 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.  

எதிர்வரும் கோடைக்காலத்தில் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, விவசாயிகளைப் பொறுத்தவரையில் மும்முனை மின்சாரம் வழங்க, மின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சூழலில் அதற்கான அடிப்படை கட்டமைப்புகளையும் சரிசெய்யப்பட்டு வருகிறது. அதன் மூலமாக எதிர்பார்க்கப்படும் 18,500 மெகாவாட் மின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். 316 துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தப் பணிகள் தொடங்கப்பட்டு மாண்புமிகு முதல்வர் தளபதி அவர்களின் திருக்கரங்களால் சில இடங்களில் அடிக்கல் நாட்டப்பட்டு அந்த இடங்களில் பணிகள் நடைபெற்று வருகிறது.  

எனவே, இந்தாண்டைப் பொறுத்தவரை விவசாயிகளுக்கு காலை 6 முதல் 8 மணி வரையிலும் மாலை 6 முதல் 10 மணி வரையிலும் இந்த 6 மணி நேரம் மட்டுமே இரு முனை மின்சாரமாக வழங்கப்படும்.  மீதம் இருக்கக்கூடிய 18 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.  ஆனால், கடந்த ஆட்சியில் டெல்டா பகுதியில் 12 மணி நேரமும் மற்ற இடங்களில் 9 மணி நேரம் மட்டுமே விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது.  எனவே, விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் அடிப்படை கட்டமைப்புகளை வலிமைப்படுத்தி அடுத்த ஆண்டு கோடை காலத்தில் முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் படி 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க தேவையான பணிகளை மின்சார வாரியம் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, நம்முடையை அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை கடந்த வருடம் பிப்ரவரியில் 18,535 மில்லியன் யூனிட்டாக இருந்த மின் உற்பத்தி இந்தாண்டு பிப்ரவரியில் 20,307 மில்லியன் யூனிட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலக்கரியைப் பொறுத்தவரை 11 நாட்களுக்கான கையிருப்பு நம்மிடம் உள்ளது.  தொடர்ந்து மும்முனை மின்சாரம் 18 மணி நேரம் வழங்கப்பட்டு வருகிறது. ஊதிய உயர்வு பேச்சு வார்த்தை தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. தொழிற்சங்கங்கள் கொடுத்த பெரும்பான்மையான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. எனவே, வரக்கூடிய ஓரிரு வாரங்களில் இறுதி செய்யப்பட்டு தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்போடு, ஒப்புதலோடு நடைமுறைக்குக் கொண்டு வரப்படும்.

கடந்த ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற கடன் தொகை ரூ.1,59,000 கோடி, இதற்காக கடந்த ஆண்டு செலுத்திய வட்டி தொகை மட்டும் ரூ.16,511 கோடி. கடந்த ஆட்சியாளர்கள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணம் மூலமாக ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் எதிர்பார்க்கப்படுவதாக நாளிதழில் செய்திகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு கட்டிய வட்டித் தொகையை விட குறைவான கூடுதல் வருவாய்தான் கிடைக்கும்.  செய்தி வெளியிடப்படுவதற்கு முன் செலவினங்கள் எவ்வளவு, வருவாய் எவ்வளவு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதித்தது எவ்வளவு என்பதை ஆராய்ந்து செய்தி வெளியிடுங்கள். மக்களிடையே தவறான தகவல் கொண்டு சேர்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்தார்.

தேர்தல் வாக்குறுதிகளில் கொடுக்கப்பட்ட விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 750  யூனிடிலிருந்து 1000 யூனிட்டாக உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டு 01.03.2023 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கைத்தறி நெசநெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 200 யூனிடிலிருந்து 300 யூனிட்டாக உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டு 01.03.2023 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் விசைத்தறி நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் அரசு மானியமாக மின்சார வாரியத்திற்கு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களெல்லாம் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது அதனை ஏற்று 2,300 கோடி அளவிற்கு குறைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் நிதி நிலை மோசமான நிலையில் இருந்தபோது தான் முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பேற்று, கொரோனா காலமாக இருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பல்வேறு திட்டட்ஙகளையும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறார்கள். அந்த அடிப்படையில் மின்சார வாரியத்தின் நிதி நிலைமையும் மிக மோசமான நிலையில் இருந்தது. ரூ.1,59,000 கோடி கடனிருந்தும் கூட 316 துணை மின் நிலையங்கள், புதிய மின் திட்டங்கள், டி.டி. மீட்டர்,  ஸ்மார்ட் மீட்டர்,  போன்ற வளர்ச்சிக்கான திட்டங்கள் நடைமுறை கொண்டுவருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. காலியாகவுள்ள பணியிடங்களின் தேவையை ஆராய்ந்து முதலமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று பணியிடங்கள் நிரப்பப்படும்.

சூரிய பூங்கா அமைப்பதற்கான இடம் தேர்வு செய்ய அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, சில மாவட்ட ஆட்சித்தலைவர்கள் இடம் தேர்வு செய்து அனுப்பி உள்ளனர். துறையின் சார்பாக அந்த இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, டிபிஆர். தயாரித்து வழங்கி உள்ளனர். அதற்கான  நிதி ஆதாரத்தை உருவாக்கி கொண்டுடிருக்கிறோம். ஏற்கெனவே மின்சார வாரியம் கடனில் உள்ளது. கடந்த காலங்களில் எந்த வங்கியும் கடன் கொடுக் முடியாத அளவிற்கு கடன் வாங்கியுள்ளனர். அதையெல்லாம் சீரமைத்து புதிய நிதி ஆதாரங்களை உருவாக்கி அதற்கானபணிகள்  தொடங்குவதற்கு முயற்சிகளை எடுத்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். பின்னர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அவர்கள்  24 மணி நேர மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் ஆய்வு மேற்கொணடார்.

Tags : Electric Board ,Minister ,Senthil Balaji , We are taking steps to reform the debt-ridden Electricity Board: Minister Senthil Balaji in an interview
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்