×

தமிழகத்தில் 4 மிதக்கும் கப்பல் தளம்: ஒன்றிய அமைச்சகம் அனுமதி

டெல்லி: சாகர்மாலா திட்டம் என்பது தமிழ்நாடு சுற்றுலா பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கிறது என கூறியுள்ள ஒன்றிய அமைச்சர், தமிழ்நாட்டில் கூடுதலாக 4 மிதக்கும் கப்பல் தளத்துக்கு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம் நாட்டின் சமூக பொருளாதார சூழலை வலுப்படுத்த சாகர்மாலா திட்டத்தின் கீழ் சீர்திருத்தங்கள் மற்றும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் பழமையான முறையில் நிரந்தர கப்பல் இறங்கு தளங்களை அமைப்பதற்கு பதிலாக தனித்துவமான மிதக்கும் இறங்கு தளங்களை உருவாக்க அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த மிதக்கும் இறங்கு தளங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவையாகவும், நவீனத்துவம் மிக்கதாகவும் நீண்ட காலம் உழைக்க கூடியதாகவும் உள்ளன.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கூடுதலாக 4 மிதவை இறங்கு தளங்களுக்கு கொள்கை அடிப்படையில் ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவின் ஆன்மீக தலமான ராமேஸ்வரத்தில் அக்னிதீர்த்தம், வில்லூண்டி தீர்த்தம் ஆகிய இடங்களில் இவை அமைக்கப்பட உள்ளன. மேலும் கடலூர், கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய இந்த இறங்கு தளங்கள் அமைய உள்ளது.

சுற்றுலா பயணிகள் தடையின்றி பாதுகாப்பாக போக்குவரத்தை மேற்கொள்ளவும், கடலோர சமுதாயத்தினரின் ஒட்டுமொத்த மேம்பாட்டை கருத்தில் கொண்டும் இந்த மிதவை இறங்கு தளங்கள் அமைக்கப்படும். கர்நாடகா மாநிலத்தில் 11 மிதவை இறங்கு தளங்களை அமைக்க ஒன்றிய அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதுகுறித்து ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறுகையில், வலுவான இணைப்புகளை வழங்குவதற்கு பிரதமர் உயர் முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

இது இந்தியாவுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். மிதவை இறங்கு தளங்களை அமைப்பது, தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு பெரிதும் வழிவகுப்பதுடன் நீர் தொடர்பான சுற்றுலாவுக்கு புதிய வழிகளையும் உருவாக்கும். இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், அந்த பிராந்தியத்தின் வர்த்தகமும் அதிகரிக்கும் என்றார்.

Tags : Tamil Nadu ,Union ministry , 4 floating docks in Tamil Nadu: Union ministry approves
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...