×

செங்கல்பட்டு மாவட்டத்தில் அக்னிவீர் ராணுவ வீரர் பணிக்கு விண்ணப்பம்: கலெக்டர் ராகுல்நாத் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமணமாகாத ஆண் தேர்வர்கள் அக்னிவீர் ராணுவ வீரர் பணிக்கு ஆன்லைன் மூலமாக வரும் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார். இந்திய ராணுவ படையால் 2023-24ம் ஆண்டுக்கான அக்னிபாத் திட்டத்தின்கீழ், திருமணமாகாத, தகுதி மற்றும் விருப்பம் உள்ள ஆண் தேர்வர்களிடமிருந்து அக்னிவீர் ராணுவ வீரர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த திருமணமாகாத, தகுதியுள்ள ஆண் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கான விண்ணப்ப கட்டணம் ரூ250. அக்னிவீர் (பொது) பிரிவுக்கு பத்தாம் வகுப்பில் 45 சதவீத மதிப்பெண்கள் மற்றும் ஒவ்வொரு பாடத்திலும் 33 சதவீதத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அக்னிவீர் (டெக்னிக்கல்) பிரிவுக்கு பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளில் 50 சதவீத மதிப்பெண் மற்றும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். முதல்கட்ட பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உடற்தகுதி மற்றும் மருத்துவ தேர்வு மாவட்ட அளவில் நடத்தப்படும்.

மேலும் விவரங்களை சம்பந்தப்பட்ட ராணுவ இணையதள முகவரிகள் வழியாக அறிந்து கொள்ளலாம். பின்னர் அந்தந்த ராணுவ இணையதள முகவரி மூலமாக அக்னிவீர் ராணுவ வீரர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 15.3.2023. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தகுதியுள்ள ஆண் தேர்வர்கள் பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்தார். 


Tags : Chengalpattu District ,Rahul Nath , Application for Agniveer Soldier Job in Chengalpattu District: Collector Rahul Nath Information
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்