திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா கொடியேற்றம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம் இன்று நடந்தது. ஏப்ரல் 1ம் தேதி ஆழித்தேரோட்டம் நடக்கிறது.

திருவாரூரில் புகழ்பெற்ற தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது. இது சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சமய குறவர்கள் நால்வரால் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் விளங்குகிறது. கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் உள்ளனர். இந்த கோயில் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது. இந்த கோயில் விழாக்களில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு வாய்ந்தது.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம், கமலாலய குளத்தில் தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டம் ஏப்ரல் 1ம் தேதி நடக்கிறது. இதற்கான பந்தல்கால் முகூர்த்தம் கடந்த மாதம் 5ம் தேதி நடந்தது. இந்நிலையில் திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது. இதையொட்டி தியாகராஜர் சன்னதி எதிரே உள்ள பெரிய கொடிமரத்துக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை நடத்தினர். இதைதொடர்ந்து கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

ஆழித்தேரின் சிறப்பு

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேர் மற்ற ஊர் தேர்களை போன்று எண் பட்டை அறுகோணம், வட்ட வடிவமைப்பு போன்று இல்லாமல் பட்டை வடிவ அமைப்பை கொண்டதாகும். 20 பட்டைகளை கொண்ட இந்த தேர், 4 அடுக்குகளை கொண்டது. கீழ்பகுதி 20 அடி, 2வது பகுதி 4 அடி, 3வது பகுதி 3 அடி உயரம் கொண்டது. 4வது பகுதியாக தேரின் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் தியாகராஜ சுவாமி அமர்ந்து வலம் வருவார். 30 அடி உயரம், 30 அடி அகலம் கொண்ட தேர், 4 ராட்சத இரும்பு சக்கரங்கள் உட்பட மொத்தம் 220 டன் எடையாகும்.

தேரோட்டத்தின்போது மூங்கில், பனஞ்சப்பைகள் கொண்டு விமானம் வரை 48 அடி உயரத்துக்கு கட்டுமான பணி, அதன்மேல் 12 அடி உயரத்துக்கு சிகரம், அதற்குமேல் 6 அடி உயரத்தில் தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் அலங்கரிக்கப்பட்டு 300 டன் எடையுடன் இருக்கும். முன்பகுதியில் 33 அடி நீளம், 11 அடி உயரம் கொண்ட கம்பீரமான நான்கு மர குதிரைகள் கட்டப்பட்டு நகரின் 4 வீதிகளையும் ஆடி அசைந்தாடியபடி ஆழித்தேர் நகர்ந்து செல்வது கண்கொள்ளா காட்சியாகும்.

Related Stories: