ரூ.312.37 கோடி செலவில் கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.!

சென்னை: கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.312.37 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, உறைவிந்து குச்சிகள் மற்றும் திரவ நைட்ரஜன் விநியோகம் செய்வதற்கான 16 வாகனங்களை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (9.03.2023) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் 189 கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவிலான புதிய கட்டடங்கள்,  நீலகிரி மாவட்டம், ஊட்டி, மாவட்ட கால்நடை பண்ணையில் 47.50 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து உற்பத்தி நிலையம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் 61 கோடியே 32 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் மற்றும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் 11 கோடியே 66 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.  மேலும், 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான உறைவிந்து குச்சிகள் மற்றும் திரவ நைட்ரஜன் விநியோகம் செய்வதற்கான 16 வாகனங்களை வழங்கினார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் தேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 82 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவிலும், திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 82 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள நிர்வாக அலுவலகக் கட்டடம், கல்வி வளாகங்கள், மாணவ, மாணவியர் விடுதிகள், கால்நடை மருத்துவச் சிகிச்சை வளாகம் மற்றும் கால்நடை பண்ணை வளாகம் போன்ற பல்வேறு கட்டடங்கள்; தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 11 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியருக்கான கூடுதல் விடுதிக் கட்டடம், பட்டணம் இன செம்மறியாடு வள மையக் கட்டடங்கள், கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவப் பயிற்சிக்கூடம், விலங்குகள் வழி பரவும் நோயறி ஆய்வகம்;

திருநெல்வேலி மாவட்டம், ராமையன்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 7 கோடியே 14 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியருக்கான கூடுதல் விடுதிக் கட்டடம்; நாமக்கல் மாவட்டம், மோகனூரில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 4 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் ஊரக கால்நடை பண்ணையாளர்களின் மேம்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள நவீன சிகிச்சை வசதிகளுடன் கூடிய கால்நடை சிறப்பு மருத்துவமனை;  சென்னை மாவட்டம், மாதவரத்தில் தேசிய கால்நடை குறிக்கோள் பணித்திட்டத்தின் கீழ் 2 கோடி ரூபாய் செலவில் கால்நடை இறைச்சி உடல் அங்கப் பயன்பாட்டு ஆலை;  என மொத்தம் 189 கோடியே 49 இலட்சம் ரூபாய் செலவிலான  தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

நீலகிரி மாவட்டம், ஊட்டி, மாவட்ட கால்நடை பண்ணையில் பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து உற்பத்தி நிலையம்

கால்நடை பராமரிப்பு துறை மூலமாக பசு மற்றும் எருமை இனங்களுக்கு உறைவிந்து குச்சி மூலம் செயற்கை முறை கருவூட்டல் செய்யப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக 50 சதவிகிதம் காளைக் கன்றுகள் மற்றும் 50 சதவிகிதம் கிடேரி கன்றுகள் பிறப்பதற்கு வழி வகுக்கிறது. கிடேரி கன்றுகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும்  நோக்கில் கால்நடை பராமரிப்பு துறை அதிநவீன தொழில்நுட்பம் மூலம் பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்தினை உற்பத்தி செய்து அதனைக் கொண்டு கால்நடைகளுக்கு கருவூட்டல் செய்வதன் மூலம் சுமார் 85 சதவிகிதத்திற்கு மேல் கிடேரி கன்றுகள் பிறப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தும் இத்திட்டத்தினை செயல்படுத்திடும் வகையில், நீலகிரி மாவட்டம், ஊட்டியில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் 47.50 கோடி ரூபாய் செலவில் மூன்று ஆண்டுகளில் 7.2 இலட்சம் பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து குச்சிகள் உற்பத்தி செய்ய ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து உற்பத்தி நிலையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.  

இந்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து குச்சிகளை  கொண்டு, பசுக்களுக்கு கருவூட்டல் செய்வதன் மூலம் அதிக எண்ணிகைகள் கிடேரி கன்றுகள் பிறப்பதற்கு வழி வகுப்பதுடன், அதிக அளவில் கறவை பசுக்களை பால் உற்பத்திக்கு கொண்டுவந்து, பால்உற்பத்தியை பெருக்கிடவும், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

உறைவிந்து குச்சிகள் மற்றும் திரவ நைட்ரஜன் விநியோக வாகனங்கள் வழங்குதல்

கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள உறைவிந்து குச்சி உற்பத்தி நிலையங்களில் இருந்து கருவூட்டல் பணி நடைபெறும் கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு உறைவிந்து குச்சிகள் மற்றும் திரவ நைட்ரஜன் விநியோகம் செய்திட ஏதுவாக செங்கல்பட்டு, விருதுநகர், சேலம், தஞ்சாவூர், ஈரோடு, சிவகங்கை, மதுரை, திருச்சி, வேலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், கோயம்புத்தூர், விழுப்புரம், தருமபுரி, திருவண்ணாமலை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு தலா ஒரு வாகனம் வீதம் மொத்தம் 2 கோடியே 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 16 வாகனங்களை வழங்கிடும் விதமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 3 ஓட்டுநர்களுக்கு வாகனங்களுக்கான சாவிகளை வழங்கினார்.

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

* நாகப்பட்டினம் மாவட்டம், நம்பியார் நகரில் 34.30 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மீன்பிடிதுறைமுகம்; தூத்துக்குடி மாவட்டம், தருவைக்குளம் மீன் இறங்கு தாளத்தில் 10 கோடி ரூபாய் செலவில் மீன் இறங்குதளத்தில் நீட்டிக்கப்பட்ட டி-ஜெட்டி மற்றும் பெரியதாழை மீன் இறங்குதளத்தில் 9 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கடலரிப்பை தடுப்பதற்கான நேர்கல் சுவர், மீன் ஏலக்கூடங்கள் மற்றும் கான்கிரீட் சாலை வசதி;

* திருநெல்வேலி மாவட்டம், கூனியூர் அரசு மீன்விதைப் பண்ணையில்  2 கோடியே 79 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள திலேப்பியா மீன் வளர்ப்புக் குளங்கள்; தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் 2 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம்;

* இராமநாதபுரம் மாவட்டம், களிமண்குண்டு மீன் இறங்குதளத்தில் 1.63 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன் ஏலக்கூடம், வலைபின்னும் கூடம் மற்றும் சாலை வசதி;

* திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரத்தில்  1.60 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் மற்றும் பயிற்சி மையம்;

என மொத்தம் 61 கோடியே 32 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் சென்னை மாவட்டம், மாதவரத்தில் 1 கோடியே 50 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள  மீன்வளத் தொழில்சார் தொழிற்கல்வி நிலையக் கட்டடம்; நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறில் 6 கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாணவ, மாணவியர்களுக்கான கூடுதல் விடுதிக்  கட்டடம், இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் 1 கோடியே 17 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வளங்குன்றா மீன்வளர்ப்பு அலுவலகம் மற்றும் ஆய்வகக் கட்டடம்.

தூத்துக்குடி துறைமுகத்தில் 1 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவிலான 22.7 மீட்டர் நீளம் கொண்ட ஆழ்கடல் செவுள் வலை மற்றும் ஆயிரங்கால் தூண்டில் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி விசைப்படகு; தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 1 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பயிற்சிக் கூடத்துடன் கூடிய ஆய்வகக் கட்டடம்.

    

என மொத்தம் 11 கோடியே 66 இலட்சம் செலவிலான தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் புதிய கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

Related Stories: