காங்கயம் சிவன்மலை கோயிலில் உலக உருண்டை வைத்து பூஜை

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசாமி கோயில் கொங்குமண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோயில்களில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். மேலும், நாட்டில் வேறு எந்த கோயிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. சுப்ரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக்கூறி அதை கோயில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோயில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் சாமி பூபோட்டு பார்த்து அதன் பின்னர் பக்தரின் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள்.

இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது. அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். அப்படி வைக்கும் பொருள் சமுதாயத்தில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த பிப்ரவரி 27ம் தேதி முதல் வேல் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், முத்தூர், வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் உத்தரவான அகிலம் என்ற உலக உருண்டை, அத்திரி என்ற பசு, அசுவம் என்ற குதிரை, 2 திருமாங்கல்ய சரடு ஆகிய 4 பொருட்கள் நேற்று (8ம் தேதி) முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: