பெரியகுளம்-அடுக்கம் வழியாக செல்லும் கொடைக்கானல் மலைச்சாலை விரிவுபடுத்தப்படுமா?: விவசாயிகள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

பெரியகுளம்: தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது. ஆனால், திமுக ஆட்சியில் மலைக்கிராம மக்கள் நலன்கருதி அறிமுகப்படுத்தப்பட்ட, ஏராளமான திட்டங்களை கடந்த ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைத்தனர்.

அதனால், மலைக்கிராமங்கள் அடிப்படை வசதியின்றி தத்தளித்து கொண்டிருக்கின்றன. கடந்த ஆட்சியில் மலைக்கிராமங்களில் அமைக்கப்பட்ட சாலைகளை பராமரித்து சீரமைக்க அதிகாரிகள் தவறி விட்டனர். இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மலைக்கிராம சாலைகள் சீரமைக்கப்படாமல், விரிவுபடுத்தப்படாமல் சேதமடைந்துள்ளது. திமுக அரசு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பொறுப்பேற்றதும் தேனி மாவட்டத்தில் போடி, வருசநாடு, சின்னமனூர், பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மலைக்கிராம மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

 

குறிப்பாக மலைக்கிராம மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலக கட்டிட பணிகள், சாலை விரிவாக்க பணிகள், பாதாள சாக்கடை பணிகள், வாறுகால் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பணிகள் ராக்கெட் வேககத்தில் படுஜோராக நடந்து வருவதாகவும் மக்கள் கூறுகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளத்திலிருந்து கொடைக்கானலுக்கு செல்வோர் காட்ரோடு சென்று அங்கிருந்து கெங்குவார்பட்டி வழியாக கொடைக்கானல் மலைப்பாதைக்கு சென்று வருகின்றனர். மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் பகுதியில் வெளிமாநிலத்தவர், வெளிநாட்டினர் அதிகளவில் வந்து செல்வதால் போக்குவரத்தும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் பல்வேறு கால கட்டங்களில் கொடைக்கானலுக்கு செல்லும் மக்கள் அடிக்கடி விபத்துகளிலும், நெருக்கடிகளிலும் சிக்கிக் கொள்வதும், வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதும் தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் பெரியகுளம் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரியகுளத்தில் இருந்து அடுக்கம்-பெருமாள் மலை வழியாக கொடைக்கானலுக்கு சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே திட்டமிடப்பட்டது தான் அடுக்கம்-கொடைக்கானல் சாலை. இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 2016ம் ஆண்டு பெரியகுளம் அடுக்கம் வழி கொடைக்கானல் மலைச்சாலை ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பெரியகுளத்திலிருந்து கும்பக்கரை சாலை, அடுக்கம், வெள்ளகவி வழியாக சாலை அமைக்கப்பட்டது. ஆனால் ஏதோ பெயரளவிற்கு திட்டத்தை செயல்படுத்தியதால் இன்று வரையில் அதில் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத சூழலே இருந்து வருகிறது.மேலும் சாலை அமைக்கும் பணிகள், தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் கடமைக்கு செய்ததால் அவ்வப்பொழுது சாலைகளில் விரிசலும், நிலச்சரிவுகள் ஏற்படுகிறது.

இதனால் டூவீலர் ஓட்டிகள் கூட சாலையை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதியாக பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் மலைச்சாலை அமைப்பது இருக்கும். ஆனால், கொடைக்கானல்- பெரியகுளம்- அடுக்கம் வழியான சாலை மக்களுக்கு ஒரு கானல் நீராகவே இருந்து வருகின்றது. ஆகவே தற்பொழுது வந்துள்ள திமுக அரசு முந்தைய ஆட்சி காலத்தில் ஏனோ தானோ என்று செய்யப்பட்ட சாலைப் பணியை ஆய்வு செய்து பெரியகுளம்- அடுக்கம் வழி கொடைக்கானல்சாலையை விரிவுபடுத்தி வாகன போக்குவரத்துக்கு ஏற்றவாறு அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். பெரியகுளத்தில் இருந்து அடுக்கம் வழியாக கொடைக்கானல் சாலையை சீரமைத்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறந்து விட்டால் பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். போக்குவரத்து விரிவாக்க பணி தொடங்கினால் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மிகுந்த பயனடையும். தமிழக அரசு பெரியகுளம் பகுதி பொதுமக்களின் நீண்ட வருட கோரிக்கையை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை உள்ளது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் கொடைக்கானல் பகுதிகளில் இருந்து பெரியகுளம் வரை ஆய்வு செய்து சாலை விரிவாக்க பணிகளை மேற்கொண்டு, தடுப்பு சுவர்கள் மற்றும் இதர பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பெரியகுளம் விவசாயி எம்.ஜி.ராஜா கூறுகையில், ‘‘பெரியகுளத்தில் விளையும் மாங்காய், ஆரஞ்சு போன்ற பொருட்களை கொடைக்கானலுக்கும், கொடைக்கானலில் விளைவிக்கும் விவசாயப்பொருட்களை பெரியகுளம் சந்தைக்கு எடுத்து வர காட்ரோடு வழியாக 24 கிலோமீட்டர் அதிக அளவில் சுற்றி வர வேண்டி உள்ளது. பெரியகுளம் கும்பக்கரை அடுக்கம் வழியாக கொடைக்கானல் மலைச்சாலை முறையாக சீரமைக்கப்பட்டால் கிமீ குறைந்து, வாகன வாடகையும் குறையும். தாங்கள் உற்பத்தி செய்யும் விவசாயப் பொருட்களை கொடைக்கானலுக்கும் கொடைக்கானல் உற்பத்தி செய்யும் பொருட்களை பெரியகுளத்திற்கும் எடுத்து வர ஏதுவாக இருக்கும். எனவே, இந்த சாலை சீரமைப்பு மற்றும் விரிவாக்கப் பணிகளை முறையாக ெசய்ய் வேண்டும்’’ என்றார்.

Related Stories: